Enable Javscript for better performance
வாகன திருட்டு கும்பலில் இருவர் கைது: 10 கார்கள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    வாகன திருட்டு கும்பலில் இருவர் கைது: 10 கார்கள் மீட்பு

    By புது தில்லி  |   Published on : 21st April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பலைச் சேர்ந்த இருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 10 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன.

    இது குறித்து தில்லி தெற்கு காவல் துணை ஆணையர் பி.எஸ்.ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

    தில்லி தெற்கு மாவட்டத்தில் அதிகளவு வாகனங்கள் திருடுபோவதாக வந்த புகார்களின் அடிப்படையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டன.

    இந் நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதி நள்ளிரவு ஆர்.கே.புரம் அருகே ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது, காரை ஓட்டி வந்தவர் தப்பிக்க முயன்றார். ஆனால், போலீஸார் சுமார் 10 கி.மீ. தூரம் துரத்திச் சென்றனர். சஃப்தர்ஜங் மருத்துவமனை அருகே அவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் புது தில்லி கல்யாண்புரி பகுதியைச் சேர்ந்த கரண் (எ) கிரண் நேபாளி (26) என்றும், ஏற்கெனவே அவர் மீது 37 வாகன திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

    மேலும், கடந்த 4 மாதங்களாக தெற்கு மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடி விற்று வந்ததும், அதற்கு உடந்தையாக காஜியாபாத் மாவட்டம், முராத் நகரைச் சேர்ந்த தில்ஷாத் (எ) இம்ரான் செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து, தில்ஷாதை கைது செய்து விசாரணை நடத்தியதில், உத்தரபிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் இதுபோல் 100-க்கும் மேற்பட்ட கார்களை திருடி, அவற்றை முழுவதுமாக உருமாற்றம் செய்து விற்று வந்ததும், அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஷகீல் என்பவர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இருவர் அளித்த தகவலின் பேரில் 10 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன. கரண் தலைமையில்தான் இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.

    மேலும், இந்த கும்பலைச் சேர்ந்த சிலர் தலைமறைவாக இருக்கக் கூடும் என்று கூடுதல் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, ஷகீல் உள்ளிட்ட மற்ற கூட்டாளிகளையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai