Enable Javscript for better performance
விவாதப் பொருளானது மேயர் பதவிக் காலம்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் மேயர் பதவிக் காலம் குறித்த விவாதம் எழுந்துள்ளது.

    ஆரம்ப காலத்தில் உள்ளாட்சி நிலையில், தில்லி நகரம் முனிசிபல் கமிட்டியாக செயல்பட்டுவந்தது. தில்லி மாநகராட்சியாக 1958, ஏப்ரல் 7-ஆம் தேதி உருப்பெற்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக தில்லி திகழ்ந்தது.

    தில்லி மாநகராட்சி 2012-ஆம் ஆண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டது. நாட்டின் தலைநகரில் மொத்தமுள்ள 9 மாவட்டங்களில் மாவட்டங்களை தில்லி மாநகராட்சிகள் தன்னிச்சையாக ஆட்சி செய்கின்றன.

    மத்திய தில்லி, வட மேற்கு தில்லி மாவட்டங்கள் வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ளன. தெற்கு தில்லி, மேற்கு தில்லி, தென் மேற்கு தில்லி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது தெற்கு தில்லி மாநகராட்சி. கிழக்கு தில்லி, வட கிழக்கு தில்லி மாவட்டங்கள் கிழக்கு தில்லி மாநகராட்சியில் அமைந்துள்ளன.

    மொத்தமுள்ள 272 வார்டுகளில் 104 வார்டுகள் முறையே வடக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகளில் உள்ளன. மீதமுள்ள 64 வார்டுகள் கிழக்கு தில்லியில் உள்ளன. தற்போது மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக ஆட்சி செய்கிறது.

    மேயர் தேர்தல்: ஐந்து ஆண்டு கால மேயர் பதவிக் காலம் தில்லியில் இல்லை. மாநகராட்சிகளின் மேயர் நிதியாண்டின் முதலாவது கூட்டத் தொடரில் ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாநகராட்சியின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில், மேயர் பதவி முதல் ஆண்டில் பெண்களுக்கும், 2-ஆவது ஆண்டில் பொதுப் பிரிவினருக்கும், 3-ஆவது ஆண்டில் தாழ்த்தப்பட்டோருக்கும் (தனி) 4, 5-ஆவது ஆண்டுகளில் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    2014-ஆம் தேர்தல்: இந் நிலையில், தில்லி மாநகராட்சிகளின் முதலாவது கூட்டத்தொடர் நெருங்கிவரும் நிலையில், மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 21-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேயர்கள் பதவிக் காலம்: இது போன்ற சூழலில் மேயர்களின் ஓராண்டு பதவிக் காலம் குறித்து தற்போதுள்ள மேயர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், மேயர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் ராம் நாராயண் துபே கூறுகையில்,"மேயராகப் பொறுப்பேற்கும் ஒருவர் மாநகராட்சியின் நிர்வாக நடைமுறைகள், மாநகராட்சியில் உள்ள பிரச்னைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கே ஓராண்டு ஆகிறது.

    இவற்றைப் புரிந்து கொண்டு செயல்படும் சமயத்தில் மேயருடைய பதவிக் காலம் நிறைவடைந்து விடுகிறது. எனவே, மாநகராட்சியைத் திறம்பட நிர்வகிக்க மேயர் பதவிக் காலத்தை ஓராண்டிலிருந்து 20 அல்லது 25 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என்றார்.

    இதே கருத்தை வடக்கு தில்லி மேயர் ஆசாத் சிங்கும் தெரிவித்தார். அவர் கூறுகையில்,"வடக்கு தில்லி மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், டெங்கு ஆகியன முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

    இவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் மேயர் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படுவதால், மாநகராட்சிப் பணிகள் பாதிக்கின்றன. எனவே, தில்லி மாநகராட்சிகளின் மேயர் பதவிக் காலத்தை ஓராண்டிலிருந்து இரண்டரை ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும்' என்றார்.

    மேயரின் பதவிக் காலம் விவகாரத்தில் கிழக்கு தில்லி, வடக்கு தில்லி மேயர்களின் கருத்துகளுக்கு தெற்கு தில்லி மாநகராட்சித் தலைவர்களிடமும் ஆதரவு உள்ளது. இதன் மேயராக சரிதா செளத்ரி இருந்து வருகிறார்.

    இந் நிலையில், மேயர் பதவிக் காலம் குறித்து இந்த மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ஃபர்ஹாத் சூரி கூறுகையில், "மேயருக்குள்ள ஓராண்டு பதவிக் காலத்துக்குப் பதிலாக, பெண்களுக்கு 5 ஆண்டுகள், தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகள், பொதுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் என மாற்றி அமைக்கலாம்' என்றார்.

    மனு தாக்கல்: தில்லி மாநகராட்சிகள் மேயர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை (ஏப்ரல் 21) கடைசி நாளாகும். இந் நிலையில், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனிடையே, மேயர் தேர்தலுக்கு முன், மேயர் பதவிக் காலம் குறித்து விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai