Enable Javscript for better performance
காங்கிரஸ் தலைமையகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு அகாலி தளம் கட்சியினர் உள்பட சீக்கியர்கள் பலர் திங்கள்கிழமை காலையில் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பஞ்சாப் முன்னாள் முதல்வரும் அமிருதசரஸ் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருமான அமரீந்தர் சிங், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர் கலவர சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்கு தொடர்பு இல்லை என்று பொருள்படும் வகையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்திருந்தார். அவரது கருத்தைக் கண்டிக்கும் வகையில் இப் போராட்டத்தில் அகாலி தளம் கட்சியினர் ஈடுபட்டனர்.

    போலீஸாருடன் மோதல்: போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுக்க அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்பாக தடுப்புகளை போலீஸார் அமைத்திருந்தனர். இருப்பினும், அதை தள்ளிக் கொண்டு கட்சி அலுவலகத்துக்குள் நுழைய அகாலி தளம் கட்சியினரும் தில்லிவாழ் சீக்கியர்களும் முற்பட்டனர். இதையடுத்து "வஜ்ரா' கலவரத் தடுப்பு வாகன உதவியுடன் போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டினர்.

    அப்போது, போலீஸாருக்கும் அகாலி தளம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்,  மோதல் ஏற்பட்டது. இப் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் இந்தியா கேட் வழியாக அக்பர் சாலை செல்லும் பாதை அடைக்கப்பட்டு வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பி விடப்பட்டன.

    அமரீந்தர் கூறியது என்ன?: முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கு அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், "சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் நடந்தபோது, வன்முறை கும்பலுக்கு ஜெகதீஷ் டைட்லர் தலைமை தாங்கவில்லை. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள்கூட ஜெகதீஷ் டைட்லரின் பெயரைக் குறிப்பிடவில்லை' என்று கூறியிருந்தார்.

    பாதல் மீது புகார்: இதற்கிடையே, தனது கருத்தை திரித்துக் கூறி பதற்றத்தை ஏற்படுத்த பஞ்சாப் முதல்வரும் அகாலி தள தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் முயற்சி செய்கிறார் என்று அமரீந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் நான் யாருக்கும் நற்சான்றிதழ் வழங்கவில்லை.

    அதே சமயம் யாரையும் குற்றம்சாட்டவும் விரும்பவில்லை. பாதல் போன்றவர்களுக்கு எனது கருத்து பிடிக்காமல் போகலாம். அதனால், பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால், நான் உண்மை பேசுவதை அவரால் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai