Enable Javscript for better performance
டீ கடையில் புகுந்த போலீஸ் ரோந்து வாகனம்- Dinamani

சுடச்சுட

    

    தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் போலீஸ் ரோந்து வாகனம் டீ கடையில் புகுந்தது. இதில் மாற்றுத் திறனாளி உள்பட மூவர் காயமடைந்தனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: காஜியாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிகப் பகுதிகளில் அடிக்கடி கொள்ளை, திருட்டு நடந்து வந்தது. இதைத் தடுக்க போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சிறப்பு வாகனமும் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்படி திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் போலீஸ் ரோந்து வாகனம் காஜியாபாத் ஆர்டிசி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரோந்து வாகனம் அப் பகுதியில் மூன்று சக்கர சைக்கிளில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி மீது மோதியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த டீ கடைக்குள் புகுந்தது. இதில் மாற்றுத் திறனாளி, டீக்கடை உரிமையாளர் உள்பட மூவர் காயமடைந்தனர். "அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் வாகனத்தில் இருந்த 5 போலீஸாரும் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்' என்று சம்பவத்தை நேரில் பார்த்த சுரேஷ் என்பவர் தெரிவித்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீஸாரின் செயலைக் கண்டித்து உள்ளூர் மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர்.  தப்பிச் சென்ற போலீஸார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    காயமடைந்த மாற்றுத் திறனாளி ராம் பிரகாஷ் திவாரி என்றும் மீரட் சாலையில் வசித்து வருபவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai