Enable Javscript for better performance
தல்பீர் சிங் சுஹாகை பரிந்துரைக்கவில்லை: பாதுகாப்புத் துறை- Dinamani

சுடச்சுட

    

    தல்பீர் சிங் சுஹாகை பரிந்துரைக்கவில்லை: பாதுகாப்புத் துறை

    By புது தில்லி  |   Published on : 22nd April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துணைத் தலைமைத் தளபதியாகவுள்ள தல்பீர் சிங் சுஹாகை புதிய ராணுவத் தலைமைத் தளபதி பதவிக்கு பிரதமர் அலுவலகத்திடம் பரிந்துரைக்கவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

    புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக தல்பீர் சிங் சுஹாகின் பெயரை பிரதமர் அலுவலகத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் பரிந்துரைத்ததாகவும், இதைத்தொடர்ந்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் நியமன கமிட்டியில் விவாதித்து ஒப்புதல் வழங்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகின.

    இதையடுத்து, "மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பதவியேற்கும் வரை ராணுவத் தலைமைத் தளபதி, லோக்பால் போன்ற முக்கிய பணி நியமனங்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது' என பாஜக கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

    அத்துடன், "புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் பெயர் பரிந்துரைக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அந்த நியமனம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கூறி தே ர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனுவும் அளித்தது.

    பதவியில் உள்ள தலைமைத் தளபதி ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக புதிய தலைமைத் தளபதியாகப் பதவியேற்க உள்ளவரின் பெயரை அறிவிப்பது மரபாக உள்ளது.

    முந்தைய தலைமைத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய தலைமைத் தளபதி ஜெனரல் விக்ரம் சிங்கின் பெயரும் அவ்வாறே அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மே 1ஆம் தேதிக்குள் புதிய ராணுவத் தலைமைத் தளபதியின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் விக்ரம் சிங் ஓய்வு பெறுகிறார்.

    இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சித்தான்ஷு கர் கூறியதாவது:

    "ராணுவத் தலைமைத் தளபதி பதவிக்கு தல்பீர் சிங் சுஹாக் பெயரை பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக வெளியான செய்திகள் அடிப்படை இல்லாதவை. உண்மைக்குப் புறம்பானவை. அதுபோன்ற தகவல்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் முற்றிலும் மறுக்கிறது' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai