Enable Javscript for better performance
தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரோஹிணி பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரோஹிணி பொறுப்பேற்பு

    By புது தில்லி,  |   Published on : 22nd April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஜி.ரோஹிணி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.

    முன்னதாக, துணைநிலை ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி உள்ளிட்ட உயரதிகாரிகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந் நிகழ்ச்சியின் முடிவில் நஜீப் ஜங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பெண் நீதிபதி பொறுப்பேற்பது பெண்கள் முன்னேற்றத்தின் அடையாளம். நாட்டில் உள்ள பெண்களுக்கு ஊக்கம் அளிக்கவும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கவும் ரோஹிணியை போல பல்வேறு முன்மாதிரி பெண்கள் அவசியம்' என்றார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி ரோஹிணி, "தில்லியில் உள்ள பெண்களுக்கு நீதித் துறை  மூலம் ஊக்கமும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வேன். தில்லி உயர் நீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக பொறுபேற்பதில் பெருமையடைகிறேன்.

    நம் நாட்டில் பெண்கள் பாலின அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்படுகின்றனர். ஆனால், பெண்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்காமல் வெளியுலகில் அனைத்துத் துறைகளிலும் பரிணமிக்கின்றனர்.

    அவர்களை ஊக்குவிக்க என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன்' என்றார். தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றதும் அவர் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்.

    நீதிபதி ரோஹிணி: ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் 1955-ஆம் ஆண்டு பிறந்தவர் ரோஹிணி. ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்தார்.

    அதைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி படித்து, 1980-இல் வழக்குரைஞரானார்.

    ஆந்திர மாநிலத்தின் வழக்குரைஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த அவர், அம் மாநில உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக 1995-இல் நியமிக்கப்பட்டார். பின்னர். உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2001-இல் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தில்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள 40 நீதிபதிகளில் ஏற்கெனவே 9 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

    தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி ரோஹிணியையும் சேர்த்து பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தில்லி உயர் நீதிமன்றம் 1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் முறையாக தலைமை நீதிபதி பதவிக்கு நியமிக்கப்படும் பெண் ரோஹிணி என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai