Enable Javscript for better performance
தில்லி தலைமைச் செயலர் நாளை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தலைமைச் செயலர் நாளை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

    By புது தில்லி,  |   Published on : 22nd April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலைகளில் சாக்கடை மற்றும் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்குரிய திட்டம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து தில்லி தலைமைச் செயலர் புதன்கிழமை (ஏப்ரல் 23) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    தலைநகர் தில்லி சாலைகளில் தேங்கும் சாக்கடை நீர், மழை நீரைத் தடுப்பது குறித்து  குறுகிய, நீண்ட காலத் திட்டம் தயாரிக்குமாறு தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    2013, அக்டோபர் 29-ஆம் தேதி பிறப்பித்த அந்த உத்தரவில், தில்லி ஐஐடி பேராசிரியர் ஏ.கே.ஹுசைன் தலைமையிலான குழு, அதற்கான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையை 2014, மார்ச் 26-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், இதுவரை தில்லி அரசு அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 16-ஆம் தேதி தலைமைச் செயலரை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந் நிலையில், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு தில்லி அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    "தில்லி ஐஐடி குழு, நகர்ப்புற மேம்பாட்டு துறை ஆகியவை அளித்த அறிக்கைகளில் குழப்பங்கள் இருந்ததால், அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என்று அதில் அரசு குறிப்பிட்டிருந்தது.

    இந் நிலையில், இந்த மனு தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி பிரதீப் நந்தரஜோக் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "நீதிமன்றம் உத்தரவிட்டும், இத் திட்டம் குறித்த தகவல்களை அளிப்பதில் அரசுத் துறைகள் தாமதித்து வந்துள்ளன.

    எனவே, இது குறித்து தலைமைச் செயலர் ஏப்ரல் 23-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai