Enable Javscript for better performance
தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி:பெண் உள்பட இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி:பெண் உள்பட இருவர் கைது

    By புது தில்லி,  |   Published on : 22nd April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் தொழிலதிபரை மிரட்டி ரூ. 2 கோடி பணம் பறிக்க முயன்றதாக பெண் உள்பட இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

    இது குறித்து போலீஸார் கூறியதாவது: தில்லியை சேர்ந்த 45 வயதுள்ள தொழிலதிபர், மேற்கு தில்லி பிரசாந்த் விஹார் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்று அளித்தார். ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரைச் சேர்ந்த மீனாட்சி (30) என்பவர் தன்னை பணம் கேட்டு மிரட்டி வருவதாக அதில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத் தொழிலதிபருக்கும் அப் பெண்ணுக்கும் ஏற்கெனவே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை அப் பெண் விடியோ மூலம் பதிவு செய்துள்ளார். இதற்கு அவரது  கணவர் சந்தீப், அவரது நண்பரும் நகை வியாபாரியுமான அருண் கோத்தாரி ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர்.

    அந்த விடியோவை காட்டி, "பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துவிடுவதாக அப் பெண், கணவர், நண்பர் ஆகிய மூவரும் சேர்ந்து தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் ரூ. 5 லட்சத்தை தொழிலதிபர் தந்துள்ளார். இந் நிலையில், மீண்டும் அவர்கள் ரூ. 2 கோடி தருமாறு தொழிலதிபரை மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தை நாடினார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மீனாட்சி, விடியோ எடுக்க உதவிய நகை வியாபாரி அருண் கோத்தாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகியுள்ள மீனாட்சியின் கணவர் சந்தீப்பை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai