Enable Javscript for better performance
பிரஜாபதி என்கவுன்ட்டர்: மோடியை விசாரிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    பிரஜாபதி என்கவுன்ட்டர்: மோடியை விசாரிக்க வேண்டும்

    By புது தில்லி,  |   Published on : 22nd April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

    பிரதமர் பதவி ஏற்றவுடன் குற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி வாக்குறுதி அளித்த நிலையில், கபில் சிபல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், "சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கின் ஒரே சாட்சியாக துளசிராம் பிரஜாபதி இருந்தார். அவரை சதித்திடம் தீட்டி என்கவுன்டரில் கொன்றுவிட்டனர்.  இந்த என்கவுன்ட்டரில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் மற்றும் மோடியின் தனி உதவியாளராக இருந்த பராக் சிங்குக்கு இடையே விரிவானதொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. அதற்கான தொலைபேசி எண்கள் அடங்கிய ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

     மோடியின் உதவியாளர் பராக் சிங் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளதால் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களும் மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.  தற்போது கிடைத்துள்ள தொலைபேசி அழைப்புகளின் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து பராக் சிங்கை சிபிஐ கைது செய்ய வேண்டும். மோடியையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்.

     மூன்று கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா உத்தரப் பிரதேசத்தில் பாஜக பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறார். இந்த நிலையில், குற்ற பின்னணி உள்ள எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி பேசுவது வியப்பாக உள்ளது' என்று கூறினார்.

     இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் மீனாக்ஷி லேகி, "கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை அப்போது எழுப்பாமல், தற்போது உண்மையான பிரச்னைகளை திசை திருப்புவதற்காக இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகிறது' என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai