Enable Javscript for better performance
மேயர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளின் மேயர் தேர்தலுக்கு  வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

    தெற்கு தில்லி: தெற்கு தில்லி மேயர், துணை மேயர், நிலைக் குழுக்கான 3 உறுப்பினர்கள், கல்விக் குழுக்கான ஓர் உறுப்பினர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    மேயர் பதவிக்கு தரம்வீர் சிங் (காங்கிரஸ்), குஷி ராம் (பாஜக), ஜீவன் லால் (தேசியவாத காங்கிரஸ்), பூல் கலி (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    துணை மேயர் பதவிக்கு பிரவீண் ராணா (காங்கிரஸ்), வீர் சிங் (பகுஜன் சமாஜ்), ஜீவன் லால் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் தத் (காங்கிரஸ்), குல்தீப் சோலங்கி (பாஜக), ஃபர்ஹாத் சூரி (காங்கிரஸ்), ராதே ஷியாம் சர்மா (பாஜக), கல்விக் குழு உறுப்பினர் பதவிக்கு ஆசிஷ் சூட் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    வடக்கு தில்லி: வடக்கு தில்லி மேயர் தேர்தல் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் பதவிக்கு யோகேந்திர சந்தோலியா (பாஜக), துணை மேயர் பதவிக்கு ரவீந்திர குப்தா (பாஜக) ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    மேயர், துணை மேயர் பதவிகளுக்கு வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால் வடக்கு தில்லி மேயராக யோகேந்திர சந்தோலியா, துணை மேயராக ரவீந்திர குப்தா ஆகியோர்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  மாநகராட்சி நிலைக்குழுவில் காலியாக உள்ள 3 உறுப்பினர்களின் பதவிக்கு ரேகா குப்தா (பாஜக), சஞ்சீவ் குமார் (பாஜக), பிருத்வி சிங் ராத்தோர் (காங்கிரஸ்) ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    கிழக்கு தில்லி: கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. மாநகராட்சி மேயர் பதவிக்கு மீனாட்சி (பாஜக), துளசி (காங்கிரஸ்), துணை மேயர் பதவிக்கு ஜெய் கோபால் (பாஜக), ஆஸ் முகமது (காங்கிரஸ்) ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    மாநகராட்சி நிலைக் குழுவில் காலியாக உள்ள 3 உறுப்பினர்களின் பதவிக்கு பாஜகவைச் சேர்ந்த பி.பி. தியாகி, ராம் நாராயண் துபே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சவிதா சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

    மேயர் தேர்வு: மாநகராட்சிகளின் மேயர் நிதியாண்டின் முதலாவது கூட்டத் தொடரில் ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    மாநகராட்சியின் ஐந்து ஆண்டு பதவி காலத்தில், மேயர் பதவி முதல் ஆண்டில் பெண்களுக்கும், 2-ஆவது ஆண்டில் பொதுப் பிரிவினருக்கும், 3-ஆவது ஆண்டில் தாழ்த்தப்பட்டோருக்கும் (தனி) 4, 5-ஆவது ஆண்டுகளில் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தில்லி மூன்று மாநகராட்சிகளின் தேர்தல்களில் மேயர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட வேண்டும் என்று பிரதேச பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து, மேயர் பதவிக் காலம் குறித்து விவாதம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, தில்லி மேயர் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் அர்விந்தர் சிங் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai