Enable Javscript for better performance
2010-இல் பஹர்கஞ்ச் தாக்குதல் தவிர்க்கப்பட்டது எப்படி?- Dinamani

சுடச்சுட

    

    2010-இல் பஹர்கஞ்ச் தாக்குதல் தவிர்க்கப்பட்டது எப்படி?

    By புது தில்லி  |   Published on : 22nd April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் 2010-ஆம் ஆண்டு பஹர்கஞ்ச் பகுதியில் இந்திய  முஜாஹிதீன் பயங்கரவாதிகள் நடத்தவிருந்த தாக்குதல் தவிர்க்கப்பட்டதன் பின்னணியை தில்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அண்மையில் தில்லி போலீஸ் கைது செய்த யாசின் பட்கல், அஸதுல்லா அக்தர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது குறித்த விவரம்: 

    2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி, கத்தீல் சித்திக், முகம்மது அத்தில் ஆகியோர் மூலம் பஹர்கஞ்ச் பகுதியில் தாக்குதல் சதியை நிறைவேற்ற இந்திய முஹாஹிதீன் இயக்கம் திட்டமிட்டது. இந்த இருவர் குழுவுக்கு யாசின் பட்கல், ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை கிடைக்க உதவியுள்ளார். பிஹாரில் வசித்துவந்த இந்திய  முஜாஹிதீன் இயக்க இணை நிறுவனரான ரியாஸ் மூலம் துப்பாக்கி, வெடிமருந்துகளை பட்கல் வாங்கினார். அதைத் தொடர்ந்து, கத்தீலை தொடர்பு கொண்ட யாசின், அத்திலுடன் தில்லி செல்லும்படியும், சாஸ்திரி பார்க் பகுதியில் தங்கி பஹர்கஞ்ச் தாக்குதலை நடத்தும்படியும் கூறியுள்ளார்.

    அதன்படி, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி இருவர் குழு பஹர்கஞ்ச் பகுதிக்கு சென்றது. ஆனால், வழியிலேயே கத்தீல் கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் அவரது இடுப்புப் பகுதியில் தோட்டா துளைத்தது. அதில் கத்தீல் காயம் அடைந்தார். இதனால், பஹர்கஞ்ச் தாக்குதல் திட்டத்தை பயங்கரவாதிகள் கைவிட்டனர்.

    அதன் பிறகு, தாக்குதல் நடத்த சரியான இடமாக ஜாமா மசூதி பகுதியை யாசின் பட்கல் தேர்ந்தெடுத்தார். அச் சதியை நிறைவேற்ற அஸதுல்லா அக்தர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா உர் ரகுமான் (எ) வகாஸ் ஆகியோரை பட்கல் தேர்வு செய்தார். ஆனால், மீண்டும் தங்களுக்கு வாய்ப்புத் தரும்படி கத்தீல், அத்தில் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். ஆகவே, அவர்களே தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அஸதுல்லா, ஜியா உர் ரகுமான் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

    இத் திட்டத்தின்படியே, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி ஜாமா மசூதி பகுதியில் வந்த சுற்றுலாப் பேருந்தில் இருந்து இறங்கியவர்களைக் குறிவைத்து கத்தீலும் அத்திலும் துப்பாக்கியால் சுட்டனர். அதில் இரு தாய்வான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம் அடைந்தனர். 

    அதைத் தொடர்ந்து, ஜாமா மசூதி அருகே தாக்குதல் நடத்திவிட்டு அவ் வழியாக வந்த பேருந்தில் ஏறி இருவரும் தப்பினர். மேலும் அப் பகுதியில் இருந்த காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழிக்கப்பட்டது. தில்லியில் 2010-ஆம் ஆண்டு அக்டோபரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வர அச்சப்படும் சூழலை உருவாக்கி சர்வதேச அளவில் நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதே இந்திய முஜாஹிதீன் இயக்கத்தின் திட்டம்.

    இத் திட்டத்துக்கு முன்பாக பஹர்கஞ்ச் தாக்குதல் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பெரும் உயிர் சேதத்தை தலைநகர் சந்தித்திருக்கும் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தில்லி போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள கத்தீல் சித்திக் புணே ஜெர்மன் பேக்கரி தாக்குதல் வழக்கில் 2012-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் அதே ஆண்டு புணே ஏர்வாடா சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai