Enable Javscript for better performance
அவதூறு வழக்கு: கேஜரிவால் ஆஜராக உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர் தொடர்ந்த அவதூறு வழக்கில் தில்லி பிரதேச முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அவரது கட்சித் தலைவர்கள் இருவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

    ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், அக் கட்சியின் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது  தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் சுரேந்தர் குமார் சர்மா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில் கூறியிருந்ததாவது: "2013-ஆம் ஆண்டில் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் என்னை அணுகி, அக் கட்சியின் தலைவர் கேஜரிவால் எனது சமூக சேவைகளால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறினர். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  இதையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தேன். பிறகு தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் தர கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு முடிவு செய்திருப்பதாக அக் கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் கூறினர். இதனால், பிரசாரத்தைத் தொடங்கினேன். அந்த வகையில் எனக்கு சுமார் ரூ.5 லட்சம் செலவானது.

    இதனிடையே, ஷாதரா வழக்குரைஞர்கள் சங்கத்தின் தேர்தலை நடத்தும் பொருட்டு சங்கத்தின் தேர்தல் குழுத் தலைவராக 2013, செப்டம்பரில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், சில அதிருப்தி சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட இடையூறு காரணமாக அத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மறு தேர்தலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந் நிலையில், 2013, அக்டோபர் 14-ஆம் தேதி முன்னணி நாளிதழ்களில், ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் என்னைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

    சமூகத்திலும், வழக்குரைஞர் தொழிலிலும் எனக்குள்ள மதிப்பைக் குலைக்கும் வகையில் அவை இருந்தன.  மேலும், அச் செய்தியில் ஷாதரா தொகுதியில் இருந்து என்னை மாற்றவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையும், குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்ததாகவும், அதை நான் எனது விண்ணப்பத்தில் குறிப்பிடத் தவறி விட்டதாகவும் ஆம்ஆத்மி கட்சியின் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால், எனக்கு மனவேதனை, இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பும் அடைந்துள்ளேன். அக் கட்சித் கட்சித் தலைவர்கள் என்னை ஏமாற்ற குற்றச் சதித் திட்டம் தீட்டினர். பிரசாரத்தில் ரூ.15 லட்சம் வரை செலவு செய்யவும் சதி செய்தனர்' என்று மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த மனு பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி முனீஷ் கர்க் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, "இது தொடர்பாக ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாணைக்கு அரவிந்த் கேஜரிவால், யோகேந்திர யாதவ், மணீஷ் சிசோடியா ஆகிய மூவரும் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

    "குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மூவருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500, 34 பிரிவுகளின்கீழ் (அவதூறு, பொதுவான உள்நோக்கம்) வரும் குற்றத்திற்காக விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மூவரும் ஜூன் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். புகார்தாரரின் வாக்குமூலம், அவரால் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்குரிய முகாந்திரத்தை அளிக்கின்றன.

    எனினும், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஏமாற்றியதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் தரக்கூடிய ஆதாரங்களை புகார்தாரர் அளிக்காததால் அந்தக் குற்றச்சாட்டு நிராகரிக்கப்படுகிறது' என்று நீதிபதி குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai