Enable Javscript for better performance
ஐஐடி மாணவர் இறந்த வழக்கு: போலீஸாரின் அறிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஐஐடி மாணவர் இறந்த வழக்கு: போலீஸாரின் அறிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

    Published on : 23rd April 2014 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் தில்லி போலீஸாரின் அறிக்கையை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. மேலும், இது தொடர்பாக வசந்த் விஹார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

    ஹரியாணா மாநிலம், ரோத்தக் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் ஆலவத் (19). இவர் தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், 2011, ஆகஸ்ட் 4-ஆம் தேதி கல்வி நிறுவனத்தின் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சதி இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, அது தொடர்பாக வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவரும் அறிக்கையை 2012, டிசம்பர் 2-ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையில், "ஐஐடி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் 12-ஆம் வகுப்பு தனித் தேர்வு முடிவு அறிவிப்பு தொடர்பாக ஏற்பட்ட பயம் காரணமாக தினேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்' என்று போலீஸார் தெரிவித்திருந்தனர்.

    இதை எதிர்த்து தினேஷின் தந்தை தில்லி பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கரண் காலியா, "போலீஸார் விசாரணையை உரிய வகையில் நடத்தாமல் அவசர கோலத்தில் நடத்தியுள்ளனர். மாணவர் தினேஷ் தனது அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனால், துன்புறுத்தல், ராகிங் கொடுமையால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கவில்லை. மாணவர் தனது கை, கால்களைத் தானே கட்டிவிட்டு அதன்பிறகு தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்த கருத்தை நம்பிக் கொண்டு இந்த வழக்கை போலீஸார் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

     போலீஸாரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அபத்தமாகவும், உண்மையற்றதாகவும் உள்ளன. மேலும், தேர்வு முடிவு பயம் காரணமாக மன அழுத்தத்தில் தினேஷ்  தற்கொலை செய்துகொண்டதாக விசாரணை அதிகாரி அறிக்கையில் கூறியுள்ளார். தினேஷ் இறப்புக்கு இரு நாள்களுக்கு முன்புதான் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றிருந்தது, இறப்பதற்கு முன்பே தினேஷுக்குத் தெரியும். எனவே, உண்மை விவரங்கள் இல்லாத போலீஸாரின் அறிக்கையை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.

     இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஆகாஷ் ஜெயின், "போலீஸாரின் விசாரணையில் குறைபாடுகளும், இடைவெளியும் உள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே, போலீஸார் தாக்கல் செய்துள்ள தினேஷ் தற்கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பாக வசந்த் விஹார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேல் விசாரணை நடத்த வேண்டும். அதன் நிலவர அறிக்கையை ஜூலை 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai