Enable Javscript for better performance
காற்றின் தர ஆய்வுத் திட்டத்தில்  என்சிஆர் பிராந்தியங்கள்- Dinamani

சுடச்சுட

    

    காற்றின் தர ஆய்வுத் திட்டத்தில்  என்சிஆர் பிராந்தியங்கள்

    By dn  |   Published on : 23rd April 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காற்றின் தரத்தை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் தேசிய தலைநகர் வலய (என்சிஆர்) பிராந்தியங்களையும் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    தில்லியில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தது.

    தில்லியில் ஆறு இணையதளங்கள்,சுற்றுப்புறச்சூழல் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள், நிகழ்நேர தரவுகள் ஆகியவை இருந்த போதிலும் காற்றின் தரத்தை ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் உரிய பலனைத் தரவில்லை. இதனால், காற்றின் தரத்தை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையில் தில்லியை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களின் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் தில்லி சுற்றுச்சூழல் துறை  கேட்டுக் கொண்டுள்ளது.

    இது குறித்து தில்லி சுற்றுச்சூழல் துறையின் அதிகாரி கூறியது:

    காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் திட்டத்தில் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளும் சேர்க்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம், போக்குவரத்து மாசு அல்லது சீரழிந்துவரும் காற்று மாசுவை கட்டுப்படுத்தத் தேவையான ஒருங்கிணைப்பு, பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

    தில்லியில் சி.என்.ஜி. முறையில் இயங்கும் வாகனங்களை இயக்கத்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தில்லியை சுற்றியுள்ள தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் இருந்து பெட்ரோல், டீசல் மூலம் இயக்கப்படும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க முடிவதில்லை.

    மேலும், தில்லியின் எல்லைப் புறங்களில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகளும், சிறிய அளவிலான தொழிற்கூடங்களும் உள்ளன. இதனால், அண்டை மாநிலங்களின் உதவி இல்லாமல் காற்றின் தரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வது சாத்தியமில்லாதது.

    இதைக் கருத்தில் கொண்டுதான் காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் எங்களுடன் அண்டை மாநிலங்களையும் பங்கேற்கச் செய்வதற்கான  வேண்டுகோளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளோம் என்றார் அவர்.

    இது தொடர்பான செயல் திட்டத்தைத் தயாரிக்கவும், அதன் அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

    இப்போது தில்லியில் சட்டப்பேரவை முடக்கிவைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருவதால், காற்றின் தரத்தை ஆய்வு செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்தும்   நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai