குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து எப்போது?
By dn | Published on : 23rd April 2014 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16-ஆம் தேதிக்குப் பிறகுதான் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.
அது வரை தில்லி சட்டப் பேரவையை முடக்கி வைக்க குடியரசுத் தலைவருக்கு ஏற்கெனவே அளித்திருந்த தனது பரிந்துரையை ரத்து செய்யும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து நிலைமையை மறுஆய்வு செய்வதிலும் துணைநிலை ஆளுநரின் அலுவலகம் ஈடுபட்டுள்ளது. தில்லியில் பதவியில் இருந்த ஆம்ஆத்மி தலைமையிலான அரசு கடந்த பிப்வரி 14-ஆம் தேதி ராஜிநாமா செய்ததன் மூலம் ஆட்சியில் இருந்து இறங்கியது.
இதைத் தொடர்ந்து, தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரையின் பேரில் தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் சட்டப்பேரவையை முடக்கி வைக்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும் பிரகடனம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியானது.
இந் நிலையில், தில்லி சட்டப்பேரவையை முடக்கி வைத்துள்ள துணைநிலை ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனு மீதான விசாரணையின்போது உண்மை மற்றும் சந்தர்ப்ப சூழலைக் கருத்தில் கொண்டு தேர்தலை நடத்த உத்தரவிடும் சுதந்திரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது. தில்லியில் புதிதாகத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டப்பேரவையைக் கலைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கும் சட்டரீதியில் தடையில்லை' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.