Enable Javscript for better performance
சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க நீதிபதி தலைமையில் குழு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க நீதிபதி தலைமையில் குழு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    Published on : 23rd April 2014 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் சாலை விபத்துகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்காணிக்க நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

    சாலைப் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் அறிக்கையை ஆராய்ந்து ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அக் குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.  கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையைச் சேர்ந்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ். ராஜசேகரன்.

    "சாலை விபத்துகளைத் தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோரி 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பு வருமாறு:

    "2010-ஆம் ஆண்டு புள்ளியியல் கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றால், சுமார் 1.30 லட்சம் பேர் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சுமார் ஐந்து லட்சம் பேர் கை, கால் முறிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர். நான்கு நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது. அவற்றைத் தடுக்க நமது சட்டங்கள் போதுமானதாக இல்லை. அதில் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அவற்றை மேம்படுத்த வேண்டும்.

    நான்கு நடவடிக்கைகள்: சாலை விபத்துகளைத் தடுக்க பொறியியல், அமலாக்கம், கல்வி, அவசரகால பராமரிப்பு ஆகிய நான்கு நடவடிக்கைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதை மத்திய அரசு உருவாக்கியுள்ள நான்கு செயல் திட்டக்குழுக்களும் உறுதிப்படுத்த வேண்டும். சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை, சாலைப் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இழப்பீடுகள் குறித்து இக் குழுக்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளன. அப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள மாநில அரசுகள் அது தொடர்பான உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கைகளின் அமலாக்கம் மிகவும் நீளமான நடைமுறையைக் கொண்டது. இது எப்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என நமக்குத் தெரியாது. இருந்தபோதிலும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இவற்றைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உளப்பூர்வமாக ஈடுபாடு காட்ட வேண்டும்.

    மூவர் குழு அமைப்பு: எப்போதும் நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை ஆராய முடியாது என்பதால், நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் மூவர் குழுவை நீதிமன்றம் அமைக்கிறது. வரும் மே 15 முதல் இக் குழு செயல்படத் தொடங்கும். அதன் உறுப்பினர்களாக மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் எஸ். சுந்தர், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய நிஷி மித்தல் ஆகியோர் இடம்பெறுவர்.

    இக் குழுவுக்கு தில்லியில் அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும். சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அமைத்துள்ள அனைத்து குழுக்களின் அறிக்கைகளை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவிடம் அளிக்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அந்த அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

    அவற்றை நீதிபதி ராதாகிருஷ்ணன் குழு ஆராய்ந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும்' என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai