Enable Javscript for better performance
ஜிடிபி மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    குரு தேக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவ வசதிகளைப் பெருக்கி, மாதிரி மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஜிடிபி மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடத்தினார். மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு, சர்க்கரை நோய்ப் பிரிவு, வளர்சிதை மாற்ற கவனிப்பு கட்டடம், தாய்-சேய் நலப் பிரிவு கட்டடம், மருந்து,மாத்திரைகள் வழங்கும் பிரிவு உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தினார்.

    நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரிடம் குறைகள் கேட்டறிந்தார். அப்போது, "மருத்துவர்களின் உரிய கவனிப்பும், ஆறுதலான வார்த்தைகளும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் மிக முக்கியமாவை. மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வருவதில் இருந்து வீட்டுக்கு செல்வது வரை இவை தொடர வேண்டும். இதை உணர்ந்து மருத்துவப் பணியாளர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது, ஜிடிபி மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக படிப்படியாக வளர்ச்சி காண்பதற்கான வழிமுறைகள் குறித்த விளக்கவுரை மருத்துவக் கண்காணிப்பாளர் மூலம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் சமையலறை, சலவையகம் ஆகியவற்றில் தரத்தை மேம்படுத்துதல், போக்குவரத்து ஒழுங்குமுறைகள், மேலாண்மைத் தகவல் அமைப்பு, மனித வள நிர்வாகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    ஜிடிபி மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக மாற்றுவதற்கான குறுகியகால, நீண்டகால நடவடிக்கைகள் குறித்து துணைநிலை ஆளுநர் ஆய்வு செய்தார்.

    மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மருந்து வழங்கும் பிரிவு ஆகியவற்றில் மக்கள் வெகுநேரம் காத்திருப்பதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

    மருத்துவமனைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து ஒழுங்குமுறை, பாதுகாப்பு, போலி ஆள்களின் நடமாட்டம் ஆகிய விஷயங்கள் தொடர்பாக மருத்துவமனைப் பணியாளர்களுடன் கலந்தாலோசித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூடுதல் காவல் ஆணையருக்கும் (வட கிழக்கு) உத்தரவிட்டார்.

    மேலும், ஜிடிபி மருத்துவமனை, எல்என்ஜேபி மருத்துவமனை ஆகிய இரண்டையும் மாதிரி மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான விரிவான திட்டத்தை உருவாக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் கூட்டம் நடத்த உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக, ஆய்வின்போது தில்லி பிரதேச அரசின் தலைமைச் செயலர் (செயலர்) மற்றும் குடும்ப நலம், பொதுப் பணித் துறை ஆகியவற்றின் செயலர்களும் சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai