Enable Javscript for better performance
தெற்கு சூடான்: ஐ.நா. நிலைகள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கவலை- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு சூடான்: ஐ.நா. நிலைகள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கவலை

    By dn  |   Published on : 23rd April 2014 11:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. நிலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருக்கு கடந்த 17-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    ஐ.நா. சபை கேட்டுக் கொண்ட போதிலும் இதுவரை தெற்கு சூடானில் மோதல்கள் நிறுத்தப்படவில்லை. அங்கு அரசியல் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது இந்தியாவுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் விளைவாக தெற்கு சூடானில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

    தெற்கு சூடானில் அரசியல் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பதன் விளைவாக அங்கு நடைபெறும் மோதல்கள் மற்றும் வன்முறைகளை சமாளிப்பது மிகக் கடினமாக உள்ளது. அங்குள்ள கட்சிகளிடையே அரசியல் ரீதியான தீர்வை அடைவதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    தெற்கு சூடானில் நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது இன்றியமையாதது என்று இந்தியா கருதுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவின் கவலையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக கடந்த 18-ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் உள்ள பார் நகரில் கடந்த 17-ஆம் தேதி ஐ.நா. நிலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் பலர் கொல்லப்பட்டனர். 2 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயமடைந்தனர்.

    தெற்கு சூடானில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்புப் படையில் இந்திய வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai