Enable Javscript for better performance
பள்ளிகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டும்: துணை நிலை ஆளுநர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டும்: துணை நிலை ஆளுநர் உத்தரவு

    Published on : 23rd April 2014 11:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டார்.

    மேலும், பள்ளிகளில் குறிப்பாக கழிவறைகள் சுத்தமில்லாமல் இருப்பது குறித்து தனது கவலையையும் அவர் தெரிவித்தார்.

    தில்லியில் தில்லி கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்  துணை நிலை ஆளுநர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

     பள்ளிகளில் கழிவறைகள் குறிப்பாக மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரக் கேடு நிறைந்ததாக உள்ளது. கழிவறைகளில் நிறைய கதவுகள் ஆணிகள் சரியாகப் பொருத்தப்படாமலும், சில இடங்களில் ஆணிகளே இல்லாமலும் உள்ளன. பல இடங்களில் கதவுகளே இல்லாத கழிவறைகள் உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் சுகாதாரத்தைப் பேண அனைத்து நடவடிகைகளையும் கல்வித் துறை எடுக்க வேண்டும்.

     இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகள் மற்றும் அங்குள்ள கழிவறைகள் அனைத்தும் சுகாதாரம் பேணப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும்.

    மதிய சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கோடை காலத்தில்  வழங்கப்படும் உணவு வகைகள் தரமானதாக உள்ளதா என்பதைக் திடீர் சோதனை நடத்தி கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிய வேண்டும். பள்ளிகளில் உள்ள சமையலறைகளில் சுகாதாரம் பேணப்படுவதையும், தரமான உணவு தயாரித்து வழங்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மொத்தத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்றார் துணை நிலை ஆளுநர். 

    கல்வித் துறை செயலாளர் பேசுகையில், "தில்லியில் அரசு நிதியுதவி பெறும் 216 பள்ளிகள் நீங்கலாக 7,000 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 16 லட்சம் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் குழந்தைகள் புதிதாக சேர்கின்றனர். மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 7.2 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றன. குழந்தைகள் உட்கார்வதற்கான டெஸ்குகள் 2.5 லட்சம் தேவைப்படுகிறது. இதில் 1.6 லட்சம் டெஸ்க்குகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai