Enable Javscript for better performance
பூட்டியிருந்த 2 வீடுகளில் ரூ.50 லட்சம் நகை கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மாடல் டவுன் பகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் வீடுகளில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டன.

    இது குறித்து தில்லி போலீஸ் உயரதிகாரி புதன்கிழமை கூறியது: வீடுகளைப் பூட்டிவிட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்த போது இக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. முதல் சம்பவம் வேலைக்குச் செல்லும் தம்பதி அலுவலகத்துக்குச் சென்றிருந்த போது திங்கள்கிழமை முற்பகலில் நடந்துள்ளது.

    வீட்டில் இருந்த மூதாட்டி காலையில் கோயிலுக்குச் சென்றுள்ளார். மீண்டும் பிற்பகல் 3 மணியளவில் திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருள்கள் சூறையாடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து போலீஸில் புகார் அளித்தார். ரோக்கம் ரூ.1 லட்சம், ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் கொள்ளையர்கள் காலை 11 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். சில நிமிடங்கள் கழித்து கையில் ஒரு பையுடன் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம்  சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    இரண்டாவது சம்பவம்: இரண்டாவது சம்பவத்தில் ரூ.20 லட்சம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கனாக் சர்மா என்பவர் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த போது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந் நிலையில், அண்டை வீட்டுக்காரர் செவ்வாய்க்கிழமை காலை  தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

    இதையடுத்து, அவர் அங்கிருந்து தில்லி திரும்பியதும், வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக தனித் தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் சம்பவத்தில் சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இரண்டாவது சம்பவத்தில் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    போலீஸ் மீது புகார்: இதற்கிடையே, இந்த இரண்டு சம்பவங்களும் அப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியை போலீஸார் சரிவர மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai