Enable Javscript for better performance
ராபர்ட் வதேராவுக்கு எதிரான நில பேர புகார் மனு: அடுத்த வாரம் விசாரணை- Dinamani

சுடச்சுட

  

  ராபர்ட் வதேராவுக்கு எதிரான நில பேர புகார் மனு: அடுத்த வாரம் விசாரணை

  Published on : 23rd April 2014 11:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்புடைய நில பேர முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரும் பொது நல மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

  இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் எம்.எல். சர்மா தாக்கல் செய்திருந்த மனுவை தலைமை நீதிபதி ஜி.ரோஹிணி, நீதிபதி பிரதீப் நந்த்ரஜோக் ஆகியோர் அடங்கிய  அமர்வு புதன்கிழமை பரிசீலித்தது. அப்போது, "இந்த மனு மீது அடுத்த வாரம் விசாரிக்கிறோம்' என்று தெரிவித்து. அதைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  மனோகர் லால் சர்மா தாக்கல் செய்த மனுவில் கூறிருப்பதாவது: "ஹரியாணா மாநிலத்தில் சுமார் 21,366 ஏக்கர் விவசாய நிலங்களை சட்டபூர்வ விதிகளைப் பின்பற்றாமல் காலனிகளாக மாற்றுவதற்கு பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கும், குடியிருப்பு கட்டுமான நிறுவனங்களுக்கும் பல்வேறு உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவால், அரசுக் கருவூலத்துக்கு ரூ.3.99 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களைக் குடியிருப்பு காலனிகளாக உருவாக்குவதற்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ஹரியாணா மேம்பாடு மற்றும் நகர்ப்புற பகுதிகள் ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு முரணாக உள்ளன.

  இது தொடர்பான தகவல்களை ஆய்வு செய்த சிஏஜி (மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்) ஆக இருந்த வினோத் ராய், ராபர்ட் வதேராவின் நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமம் பற்றி விசாரிக்கவும், அதன் வரவு செலவு கணக்குகளைத் தணிக்கை செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அவருக்கு பின்பு தற்போது அப் பதவியை வகித்து வரும் சஷிகாந்த் சர்மா முந்தைய சிஏஜியின் உத்தரவைத் திரும்பப் பெற்ற நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

  ஹரியாணா மாநிலத்தில் உள்ள குர்கான், பிற பகுதிகளில் 2005-2012 ஆணடுகளில் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மாநகர் மற்றும் நாட்டுப்புறத் திட்டமிடல் துறை (டிடிசிபி) மூலம் நூற்றுக்கணக்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலத்தின் சொந்தக்காரராக இல்லாத தனி நபருக்கு வழங்கப்பட்ட இந்த உரிமங்கள் சட்டவிரோதமானவை. மேலும், ஊழல் தடுப்புச் சட்டப்பின்படி இவ்வாறு செயல்படுவது ஊழலாகக் கருதப்படும்.

   ஆகவே, இந்த விவகாரத்தில் ராபர்ட் வதேரா, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி நிறுவனம், டிஎல்எஃப் யுனிவர்சல் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

  காலனிகளாக மாற்றுவதற்கு 2005-2012 ஆண்டுகளில் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் குறித்து நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

   மேலும், வதேரா தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜஸ்தானில் உள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி, அதன் துணை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிலம் ஒதுக்க நடந்த பேரங்கள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. அவரது கணவரான  ராபர்ட் வதேரா மீது விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு பெற்று தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும், இதற்கு சோனியாவின் மருமகன் என்ற செல்வாக்கை அவர் பயன்படுத்தி வருகிறார் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai