Enable Javscript for better performance
வாகனங்களுக்கு ஃபேன்ஸி எண் ஒதுக்கும் திட்டம் தேர்தல் ஆணைய ஒப்புதலுக்குப் பிறகே அமல்- Dinamani

சுடச்சுட

    

    வாகனங்களுக்கு ஃபேன்ஸி எண் ஒதுக்கும் திட்டம் தேர்தல் ஆணைய ஒப்புதலுக்குப் பிறகே அமல்

    By dn  |   Published on : 23rd April 2014 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகனங்களுக்கு ஆன்லைனில் ஃபேன்ஸி எண் ஒதுக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே தில்லி போக்குவரத்து துறை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

    இத் திட்டத்துக்கு தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆதரவு அளித்துள்ளார். எனினும், மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து, இத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போக்குவரத்துத் துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரி கூறுகையில், "தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், இத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான மென்பொருள்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளோம். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஆன்லைனில் ஃபேன்ஸி எண்ணுக்கான ஏலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    ஒவ்வொரு வரிசைத் தொடரிலும் 140 விஐபி எண்கள் இருக்கும் வகையில் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் அடிப்படை விலை ரூ.20 ஆயிரத்தில்    தொடங்கி ரூ.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்துக்கு விண்ணப்பித்து அதிக விலைக்கு வாங்கும் நபர்களுக்கு 14 நாள்களுக்குள் பிரீமியம் எண்கள் ஒதுக்கப்படும்' என்றார்.

    கள்ளச்சந்தையில் வாகனங்களுக்கு ஃபேன்ஸி எண் ஒதுக்கப்படுவதைத் தடுக்கவும், அரசுக்கு வருவாய் ஏற்படுத்தவும் இத் திட்டத்தை தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் 2013, செப்டம்பரில் அமல்படுத்த எண்ணினார்.

    எனினும், அதற்குள் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரவே, இத் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. அடுத்து வந்த அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு இத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் செயல்படுத்த முடியாமல் போனது. எனினும் தில்லியில் எம்பி, எம்எல்ஏக்கள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு மட்டும் ஃபேன்ஸி எண்கள் ஒதுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai