Enable Javscript for better performance
ஆரோக்கிய உணவு: பட்டியல் தயாரிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அதிக கொழுப்பு, இனிப்பு, உப்பு சேர்மானம் கொண்ட உணவு வகைகளில் இருந்து ஆரோக்கியமான உணவு வகைகளைப் பிரித்துக் காட்டும் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான பட்டியலைத் தயாரிக்கும் பணியில் நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் வழக்குரைஞர் ஒருவரையும் நீதிமன்றம் நியமித்துள்ளது.

    பள்ளிக் குழந்தைகள் நொறுக்குத் தீனி வகைகளுக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு வறுவல் போன்ற உள்ளிட்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

    கலோரிகள் அதிகம் கொண்ட இதுபோன்ற உணவு வகைகளில் கொழுப்பு போன்ற உடலுக்குத் தீங்கு இழைக்கும் சேர்மானங்கள் அதிகம் இருப்பதாகக் கூறி அவற்றைப் பள்ளிகளிலும் பள்ளிகளுக்கு அருகிலும் விற்பதற்குத் தடை செய்ய கோரி உதய் ஃபவுண்டேஷன் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராகுல் வர்மா, தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

    "தில்லியில் உள்ள பள்ளி வளாகங்களில் நொறுக்குத்தீனி விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் இருந்து 500 கஜ தூரத்திற்குள் துரித உணவு வகைகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். பள்ளிகளின் வளாகங்களிலேயே சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான கொள்கை உருவாக்கப்பட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்த மனு தொடர்பான முந்தைய விசாரணையின்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் அதிக கொழுப்பு, இனிப்பு, உப்பு மிகுந்த உணவு வகைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையகம் சில விதிகளை வகுத்திருந்தது.

    அதேபோன்று, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழலியலாளர் சுனிதா நரைன் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியிருந்தது. அதில் பள்ளிகளில் சிற்றுண்டிச்சாலை கொள்கையை உருவாக்கவும் பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பான பரிந்துரை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந் நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி பிரதீப் நந்தரஜோக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்ற நண்பனாக வழக்குரைஞர் நீரஜ் கிஷன் கௌலை நியமித்தது. மேலும், நிபுணர் குழு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து பள்ளிகளில் அமல்படுத்தக் கூடிய, ஆரோக்கியமான உணவு வகைகளை அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த "ஜங்க்-ஃபுட்' உணவுகளில் இருந்து பிரித்து ஒரு பட்டியலாக தயாரித்து மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அளிக்குமாறு வழக்குரைஞரை நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai