Enable Javscript for better performance
உயரதிகாரி மீது அலுவலர் புகார்: விசாரணைக்கு ஆணையர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    உயரதிகாரி மீது அலுவலர் புகார்: விசாரணைக்கு ஆணையர் உத்தரவு

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மிரட்டும் தொனியில் உத்தரவிடுவதாக மாநகராட்சி உயர் அதிகாரி மீது கணக்குத் தணிக்கைப் பிரிவின் கீழ்நிலை அலுவலர் அளித்த புகார் குறித்து விசாரிக்க ஆணையர் பி.கே. குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    வடக்கு தில்லி மாநகராட்சியின் கூடுதல் ஆணையராக (டிஇஎம்எஸ்) பணியாற்றி வருபவர் தீபக் ஹஸ்திர். நிதிப் பிரிவில் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வருபவர் மாயங் சர்மா.

    இவரது நிதிப் பிரிவில் துணைக் கணக்குத் தணிக்கை (நிதி மற்றும் பொது) அலுவலராகப் பணியாற்றுபவர் கே.எஸ். பிஷ்ட். இவர் தீபக் ஹஸ்திர் மீது வடக்கு தில்லி மாநகராட்சி ஆணையருக்குப் புகார் கடிதம் எழுதியிருந்தார்.

    தீபக் ஹஸ்திர் தனது வரம்பு மீறி கணக்குத் தணிக்கை பிரிவில் தலையிடுவதாகவும், அவரது பிரிவின் மூலம் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு விளக்கம் கேட்டால், உரிய பதில் அளிக்காமல் மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

    ஏற்கெனவே, "இரவு நேர குடில்களுக்கான போர்வை வாங்குவதற்குக் கூடுதல் ஆணையர் தீபக் ஹஸ்திர் நிதிப் பிரிவுக்கு கோப்பு அனுப்பியிருந்தார். அதைப் பரிசீலித்த நிதிப் பிரிவு, "போர்வை வாங்குவதற்கான இரவு நேர குடில்கள் மாநகராட்சியால் நடத்தப்படுபவையா? இல்லையா?' என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

    அதற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, "நிதிப் பிரிவு தன்னுடைய அதிகார வரம்புகளை மீறக் கூடாது. நிதி அம்சத்தை மட்டுமே நிதிப் பிரிவு கவனிக்க வேண்டும்' என்று கூடுதல் ஆணையர் தீபக் ஹஸ்திர் கூறியதாக புகாரில் பி.கே. பிஷ்ட் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்துமாறு வடக்கு தில்லி மாநகராட்சி ஆணையர் பி.கே. குப்தா உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து ஆணையர் பி.கே. குப்தா கூறுகையில், "இது தொடர்பாக புகார் வந்துள்ளது. ஆனால், முழு விவரம் எனக்குத் தெரியவில்லை. அதனால், முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    தீபக் ஹஸ்திர் கூறுகையில், "நிதிப் பிரிவின் கூடுதல் ஆணையர் எனக்கு செய்த கெடுதல்கள் குறித்து மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    மேலும், மயங்க் சர்மா கூடுதல் ஆணையராக நியமிக்கப்படவில்லை. அவர் தலைமை கணக்காளராகத்தான் இருந்தார். விதிகளை மீறி அவருக்கு கூடுதல் ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    நான் அனுப்பிய கோப்புகளை பி.கே. பிஷ்ட் திருப்பி அனுப்பியிருந்தார். அது அவமதிப்பதாக இருந்தது. இதனால், எதிர்காலத்தில் கவனமாக இருக்குமாறு அவரிடம் கூறினேன்.

    மாநகராட்சியின் நிதித் துறைப் பணியானது முன்மொழிவின் நிதி சாத்தியக்கூறுகள் மீது கருத்து கூறுவதாகும்.

    ஆனால், எங்களது முன்மொழிவுகளுக்கு கூடுதல் ஆணையர் (நிதி) தேவையில்லாத ஆட்சேபங்களைத் தெரிவிக்கிறார். அவர்களுக்கு நல்ல நோக்கம் இல்லை' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai