Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக வழிமுறைகளை வகுத்த பிறகும் அதை மீறும் வகையில் தன்னிச்சையாக செயல்படும் மத்திய அரசின் போக்குக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    தெரிவித்தது.

    ஜல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி பிராணிகள் நல அமைப்பு சார்பில்

    தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜேஷ் கன்னா,"காளைகளைத் துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும். மேலும், விடியோ காட்சிப் பதிவும், தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும்' என்று கூறினார்.

    அப்போது நீதிபதிகள், "ஜல்லிக்கட்டு தடை கோரும் வழக்கு 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. ஆனால், அவை மீறப்படும் வகையில் காளைகள் மீதான துன்புறுத்தல்கள் தொடருவதாக இந்திய பிராணிகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள் தடை பட்டியலில் இருந்து காளையை நீக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, அந்த முன்மொழிவை மேற்கொள்ளும் முன்பு இந்திய விலங்குகள் நல வாரியத்திடமோ, உச்ச நீதிமன்றத்திடமோ ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை?' என்று அதிருப்தி தெரிவித்தனர்.

    இதையடுத்து, பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜ் பஞ்ச்வாணி, "மனிதர்களைப் போல விலங்குகளும் உணர்ச்சியுள்ள உயிரினம். ஆனால், "ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் காளைகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல் தொடர்கிறது. போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படுகின்றன. காளைகள் துன்புறுத்தலும், கொடுமைகளுக்கும் ஆளாகின்றன. இதனால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

    அவரது கருத்தை ஆமோதித்த நீதிபதிகள் "விலங்குகள் நல விவகாரத்தில் அதிகாரம் மிக்க அமைப்பு விலங்குகள் நல வாரியம். ஆனால், அதன் அறிக்கையையே மத்திய, மாநில அரசுகள் ஒருதலைபட்சமானது என்று கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? இந்த விவகாரத்தில் பல முறை நீதிமன்றம் தலையிட்டு வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன் பிறகும் விதிகளை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?' என்று கண்டிப்புடன் கூறினர்.

    இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி, "ஜல்லிக்கட்டு பேரவை' சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கே. பாலி ஆகியோர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரும் வழக்கின் விசாரணை முடிவுக்கு வருவதாகவும், மத்திய அரசு ஏதேனும் தெரிவிக்க விரும்பினால், அதை எழுத்து வடிவில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் நீதிபதிகள்

    குறிப்பிட்டனர்.

    பின்னர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் "ரேக்ளா' பந்தயத்தில் பங்கேற்கும் மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளவதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கின் வாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai