Enable Javscript for better performance
பயங்கரவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கு: விசாரணை தொடர தில்லி நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கு: விசாரணை தொடர தில்லி நீதிமன்றம் உத்தரவு

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்பட்ட ஜம்முவை சேர்ந்த இருவருக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று சிபிஐ தெரிவித்த கருத்தை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது. வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தது.

    2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லியில் இருந்து ஜம்முவுக்கு சென்ற ஜம்மு காஷ்மீர் மாநில அரசுப் பேருந்தில் மௌரிஃப் கமர், இர்ஷத் அலி ஆகியோர் பயணம் செய்தனர்.

    அப் பேருந்தை வடக்கு தில்லியில் உள்ள கர்னல் சாலையில் தில்லி போலீஸின் பயங்கரவாதிகள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழிமறித்து அதில் பயணம் செய்த இருவரையும் கைது செய்தனர்.

    அப்போது, அவர்கள் வசம் இரண்டு கைத்துப்பாக்கிகள், 16 கையெறி குண்டுகள், மூன்று மின்னணு வெடிகுண்டு, இரண்டு கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும் இருவரும் தடை செய்யப்பட்ட பாகிஸ்தானின் அல்-பாதர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் குற்றம்சாட்டினர். பல மாதங்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அவர்கள் வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து, இர்ஷத் அலின் சகோதரர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எனது சகோதரரும் மௌரிஃப் கமரும் போலீஸ் உளவாளிகள். ஆனால், தில்லி போலீஸார் சதி செய்து இருவர் மீதும் போலியாக வழக்கை ஜோடித்துள்ளனர். ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. மேலும, விசாரணையின் முடிவில் தில்லி போலீஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றத்தில் நடத்தலாமா என்பது குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியது.

    அதன்படி, இருவர் கைது விவகாரத்தை விசாரித்த சிபிஐ, இருவருக்கு எதிரான வழக்கு நடைபெறும் தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    அதில், மௌரிஃப் கமர், இர்ஷத் அலி ஆகியோர் போலீஸ் உளவாளிகள்தான். தில்லி போலீஸின் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் பணியாற்றிய மூன்று உதவி ஆய்வாளர்கள் கூட்டுச் சேர்ந்து இருவருக்கு எதிராக வழக்கை ஜோடித்துள்ளனர். ஆகவே, இந்த வழக்கை முடித்துக் கொள்ளலாம்' என சிபிஐ கூறியிருந்தது.

    இந் நிலையில், சிபிஐ அறிக்கை தொடர்பாக ஐந்து ஆண்டுகளாக விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற கூடுதல் நீதிபதி தயா பிரகாஷ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

    "குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரும் போலீஸ் உளவாளிகள் ஆக செயல்பட்டனர் என்ற காரணத்துக்காக அவர்கள் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே, வழக்கை முடித்துக் கொள்ளலாம் என சிபிஐ கூறுவதை ஏற்க முடியாது. போலீஸ் உளவாளிகளாக இருப்பவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்று கூறிவிட முடியாது.

    தில்லி போலீஸ் தொடர்ந்துள்ள வழக்கில் மௌரிஃப் கமர், இர்ஷத் அலி ஆகிய இருவரும் 2005-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் வரை பாகிஸ்தானுக்கு சென்று பயங்கரவாத பயிற்சி பெற்றனர் என்று கூறியுள்ளனர்.

    அந்த கோணத்தை ஏன் சிபிஐ விசாரிக்கவில்லை? மேலும், இருவரை குறிவைத்து மூன்று தில்லி போலீஸ் அதிகாரிகள் வழக்கை ஜோடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி சிபிஐ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்டபோதே, அவர்கள் மீது வெடிமருந்துகள் தடுப்புச் சட்டப்படி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஆனால், அந்த வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன? எங்கு, எதற்காக கொண்டு செல்லப்படுகின்றன? என்பதை தில்லி போலீஸ் விசாரிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும். அதன் மீது தீர்ப்பு வெளியாகும் வரை சிபிஐ அளித்துள்ள அறிக்கை மீது எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது' என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai