Enable Javscript for better performance
பிரபல இறைச்சி வியாபாரியிடம் வருமான வரித் துறை விசாரணை- Dinamani

சுடச்சுட

  

  பிரபல இறைச்சி வியாபாரியிடம் வருமான வரித் துறை விசாரணை

  By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெளிநாடுகளில் ஹவாலா பணம் பதுக்கியது தொடர்பாக இந்தியாவின் பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா விவகாரத்தில் அவருக்குத் தொடர்புடையதாக அதிகாரிகள் சந்தேகிப்பதால், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மத்திய அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சில மாதங்களுக்கு முன்பு மொயின் குரேஷி லண்டன் சென்றிருந்தபோது, அங்கு நட்சத்திர ஹோட்டல் விற்பனை பேரம் நடந்தது. அப்போது, லட்சக்கணக்கான பிரிட்டன் பவுண்டுகளை ஒரே நேரத்தில் அளித்து அவர் அந்த ஹோட்டலுக்கான பேரத்தை முடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது செயல்பாட்டில் பிரிட்டன் உளவுத் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  இதையடுத்து, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டன. உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர், புது தில்லி மற்றும் அதனருகே உள்ள நொய்டா ஆகிய இடங்களில் மொயின் குரேஷிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை நடத்தினர். அவரது வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தனது ஊழியர் பெயரிலும் அவர் கோடிக்கணக்காண ரூபாயை முதலீடுகளை மேற்கொண்டுள்ளதும் தெரியவந்தது.

  இந் நிலையில், துபை, லண்டன் ஆகிய நகரங்களுக்கு அவர் அடிக்கடி பயணம் செய்துவந்ததும் இறைச்சி ஏற்றுமதியாளர் போர்வையில் அவர் தனது ஹவாலா நடவடிக்கையைத் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். அவரது பாஸ்போர்ட்டை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. சுமார் 520 மணி நேரம் அவர் பல்வேறு நபர்களுடன் பேசிய தொலைபேசி உரையாடலையும் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அதன் ஒலிநாடாக்களை ஜண்டேவாலானில் உள்ள மத்திய வருமான வரி தலைமை இயக்குநரகம் ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  புது தில்லியில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியாகக் கருதப்படும் டிஃபென்ஸ் காலனியில் மொயின் குரேஷிக்கு இரண்டு வீடுகள், சத்தர்பூரில் ஒரு பண்ணை வீடு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு அதே பகுதியில் ஒரு அலுவலகம் இருப்பதும் அந்த இடத்தின் உரிமையாளர் சிபிஐ முன்னாள் உயரதிகாரியின் உறவினர் என்றும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் தனியார் உறைவிட பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவராக மொயின் குரேஷி, அதன் துணைத் தலைவராக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் உள்ளனர். மேலும், பல முக்கிய பிரபலங்களும் அப் பள்ளியின் நிர்வாகக் குழுவில் உள்ளனர்.

  இந்நிலையில், அவருக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத் தொழிலதிபருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதையடுத்து, அவரது தில்லி இல்லத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 23) அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மொயின் குரேஷி தொடர்பான விவகாரத்தை மத்திய அமலாக்கத் துறை விசாரிக்க மத்திய நிதியமைச்சகம் விரைவில் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai