Enable Javscript for better performance
மலேரியா ஒழிப்பு திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    மலேரியா ஒழிப்பு திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு அவசியம்

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் நிறுவனங்கள் மலேரியா ஒழிப்புத் திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று சர்வதேச சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

    உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மலேரியா விழிப்புணர்வு மாநாட்டில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் அதன் பிரதிநிதி ஹெவ் வெர்ஹுசல் கலந்து கொண்டு பேசியது:

    ஆசிய பசிபிக் நாடுகளில் உயிர்க்கொல்லி நோயாக மலேரியா உள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 95 சதவீதம் பேர் மலேரியா பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என அரசு தெரிவிக்கிறது.

    இந்தியா போன்ற நாடுகளில் மலேரியா ஒழிப்பு சவால் நிறைந்ததாக உள்ளது. இத்தகைய உயிர்க்கொல்லி நோயான மலேரியாவை ஒழிப்பது அவசியம். இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், மலேரியா ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மலேரியா ஒழிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பெரு நிறுவனங்களை சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் வலியுறுத்த வேண்டும் என்றார்.

    உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், "தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 140 கோடி பேர் மலேரியா பாதிப்பு பகுதிகளில் வசிக்கின்றனர்.

    குறிப்பாக காடு, மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் சுரங்கம், வேளாண்காடு வளர்ப்பு, சாலை, அணை கட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப் பகுதிகளில் மலேரியா தடுப்பு மருந்துகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மருந்து தெளிக்கப்பட்ட கொசு வலை ஆகியவற்றை அளிப்பதற்கு போதுமான கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என்றார்.

    எம்பவர் ஸ்கூல் ஆஃப் ஹெல்த் பேராசிரியர் பால் லால்வாணி கூறுகையில், "மலேரியா ஒழிப்புக்கு ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம். மலேரியா ஒழிப்புத் திட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். உள்ளூர், சர்வதேச அளவில் மலேரியா ஒழிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்' என்றார்.

    சர்வதேச சுகாதார நிறுவனத்தின் "ரோல்பேக் மலேரியா பார்ட்னர்ஷிப்', "ஏசியா-பசிபிக் லீடர்ஸ் மலேரியா அலையன்ஸ்', "எம்பவர் ஸ்கூல் ஆஃப் ஹெல்த்' ஆகிய அமைப்புகள் இணைந்து இம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

    இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 50 முதல் 70 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேரியா இல்லாத நாடாக மாலத் தீவு திகழ்கிறது.

    வங்கதேசம், பூடான், கொரியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் மலேரியா தாக்குதல் 75 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ஆம் தேதி "உலக மலேரியா தினம்' கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும் 106 நாடுகளில் 300 கோடி பேர் மலேரியா பாதிப்பு உள்ள பகுதிகளில் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai