Enable Javscript for better performance
யாசின் பட்கலுக்கு ஜாமீன் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜாமா மசூதி அருகே 2010-ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதி யாசின் பட்கலின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

    இது தொடர்பாக அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செஷன்ஸ் நீதிமன்ற கூடுதல் நீதிபதி தயா பிரகாஷ் பரிசீலித்தார். அப்போது யாசின் பட்கலை ஆஜர்படுத்திய போலீஸார், "ஜாமா மசூதி தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸதுல்லா அக்தருடன் சேர்த்து பட்கலை விசாரிக்க வேண்டும். எனவே, இருவரிடமும் விசாரணை நடத்த மேலும் 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.

    பட்கலை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரும் மனுவை அவரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.எஸ். கான் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, "இருவரும் கைது செய்யப்பட்டு 90 நாள்கள் கடந்த பிறகும் ஜாமா மசூதி தாக்குதல் வழக்கில் இன்னும் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஆகவே, பட்கலை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு ஆட்சேபம் தெரிவித்த போலீஸார் "இத் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த ஜியா உர் ரஹுமான் அண்மையில்தான் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்த பயங்கரவாதிகள் ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல், அமீர் ரிஸா கான் ஆகியோர் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்கள் பற்றி எல்லாம் இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகவே, யாசின் பட்கலை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது' என்று வலியுறுத்தினர்.

    அதை ஏற்றுக் கொண்ட கூடுதல் நீதிபதி தயா பிரகாஷ், யாசின் பட்கலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், "யாசின் பட்கல், அஸதுல்லா அக்தர் ஆகியோரிடம் மே 8-ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்' என்றும் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai