Enable Javscript for better performance
11 மாநிலங்கள் - 117 தொகுதிகள்:விறுவிறுப்பான வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    11 மாநிலங்கள் - 117 தொகுதிகள்:விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    By புது தில்லி,  |   Published on : 25th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைக்கு 6ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மேற்குவங்கத்தில் 82 சதவீதமும், அஸ்ஸாமில் 77 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    மக்களவையில் உள்ள 543 இடங்களுக்கு கடந்த 7ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5ஆவது கட்டமாக கடந்த 17ஆம் தேதியன்று 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து மிகப்பெரிய அளவாக 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு 6ஆம் கட்டமாக வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் காலையில் தொடங்கியதில் இருந்து இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதனால் படிப்படியாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தபடி இருந்தது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 73 சதவீத வாக்குகள் பதிவாகின.

    புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 83 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த மக்களவைத் தேர்தலுடன் (79.85 சதவீதம்) ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகமாகும்.

    மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2வது கட்டமாக 6 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில், 82 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 3வது மற்றும் கடைசி கட்டமாக 6 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 77.05 சதவீத வாக்குகள் பதிவாகின.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 3ஆவது கட்டமாக 12 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 3ஆவது மற்றும் கடைசி கட்டமாக 10 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 64.4 சதவீத வாக்குகள் பதிவாகின.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 59.2 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 63.4 சதவீத வாக்குகள் பதிவாகின.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 62.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

    பிகாரில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரத்தில் 19 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின. மும்பையில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின. மும்பையில் கடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்துடன் (41.43 சதவீதம்) ஒப்பிடுகையில், இது 12 சதவீதம் அதிகமாகும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் மிகக்குறைவான அளவாக 28 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இருப்பினும் கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் (26.9 சதவீதம்) ஒப்பிடுகையில் இது ஒரு சதவீதம் அதிகமாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai