Enable Javscript for better performance
அலுவலகத்தில் இல்லாத அதிகாரிகள்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தும் பொது மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் சிலர் வரவில்லை. மேலும், போதிய விளம்பரமும் விழிப்புணர்வும் இல்லாததால் பொதுமக்களும் குறைவாகவே வந்தனர்.

    பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக அதிகாரிகள் குறிப்பிட்ட நேரங்களில் அலுவலகத்தில் இருந்து மனு பெறும் புதிய முயற்சியை தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக தில்லி அரசின் அனைத்து முதன்மைச் செயலர்கள், செயலர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அவர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தார். புதன்கிழமை நீங்கலாக ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்பதற்கு வசதியாக அவரவர் அலுவலகத்தில் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக தில்லி தலைமைச் செயலர் அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தார். இந் நிலையில், வியாழக்கிழமை சில துறைகளின் முதன்மைச் செயலர்கள், துறைத் தலைவர்கள் அலுவலகத்தில் இல்லையெனக் கூறப்படுகிறது. ஆளுநரின் உத்தரவு குறித்து அவர்களுக்குத் தெரியாததே இதற்கு காரணம் என்று தில்லி அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. சில துறைகளின் அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களின் வருகைக்காக இருந்தனர். ஆனால், போதிய விளம்பரம், விழிப்புணர்வு இன்மையால் பொதுமக்கள் சொற்ப அளவிலேயே வந்தனர். அவர்கள் மட்டுமே அதிகாரிகளை சந்தித்தனர். சில துறைகளின் அலுவலகங்களில் குறைகேட்பு நேரம் காலை 11 மணி முதல் 12 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் சந்திக்கும் நேரத்தை போக்குவரத்துத் துறை ஒரு மணி நேரம் குறைத்திருந்தது. அந்த அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில், "பொதுமக்கள் சந்திப்பு பிற்பகல் 12 மணியில் இருந்து ஒரு மணி வரை' என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

    அதே போன்று, துணைநிலை ஆளுநரின் உத்தரவு குறித்து கலால் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் தெரியாத நிலையையும் பார்க்க முடிந்தது. உணவு, வழங்கல் துறை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் குறை கேட்பு நேரத்தின்போது அலுவலகத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai