Enable Javscript for better performance
உச்ச நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளை குறைக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளை குறைக்க நடவடிக்கை

    By புது தில்லி  |   Published on : 26th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளைக் குறைக்க எனது பதவிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற பி. சதாசிவம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார். இதையொட்டி, உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கும், உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெறும் கியான்சுதா மிஸ்ராவுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நீதிபதி பி. சதாசிவம் ஆற்றிய ஏற்புரை: உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி பதவியேற்ற பிறகு 9 மாதங்களின் ஒவ்வொரு நாளையும் நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவித்து பணியாற்றினேன். எனது பதவிக் காலத்தில் காலியாக இருந்த பணியிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் பதவியேற்ற பிறகு அனைத்து மாநிலத் தலைமை நீதிபதிகளுக்கும் எழுதிய கடிதத்தில் அனைத்துப் பணியிடங்களையும் விரைந்து நிரப்பும்படி கேட்டுக் கொண்டேன்.

    தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சமயத்தில் 67,964 நிலுவை வழக்குகள் இருந்தன. அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்தேன். அதன் விளைவாக, தற்போது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 63,500 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல 10 அரசியல் சாசன அமர்வு விசாரணைகளும் பைசல் செய்யப்பட்டுள்ளன.

    உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக தேசிய அளவிலான "லோக் அதாலத்' (மக்கள் நீதிமன்றம்) கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில், நாடு முழுவதும் 71.78 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகும் முன்பே லோக் அதாலத் மூலம் 25.29 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன.

    அதேபோன்று, நிகழாண்டில் இரண்டாவது லோக் அதாலத் நீதிமன்றம் 20 மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதில் 27.47 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. இவற்றில், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகும் முன்பே 37.87 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன.

    குடும்பத்துக்கு நன்றி: எனது வாழ்க்கையில் நன்றிக்குரியவர்களாக நான் பார்ப்பவர்களில் முதலில் எனது தந்தை. அவர் உதவியில்லாமல் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. இரண்டாவது எனது தாய். எனக்காக எப்போதும் பிரார்த்திப்பவர். மூன்றாவது எனது மனைவி. நான் சட்டக் கல்வி பயின்ற காலத்தில் உறுதுணையாக இருந்தவர். திருமணத்திற்குப் பிறகுதான் சட்டக் கல்வியில் சேர்ந்தேன். அடுத்து, எனக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் ஆகியோருக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றார் நீதிபதி பி. சதாசிவம்.

    புதிய தலைமை நீதிபதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம். லோதா தலைமை வகித்துப் பேசுகையில், "உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை வகித்த காலத்தில் சதாசிவம் பல்வேறு பணிகளை திறம்படச் செய்துள்ளார். அரசு வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கி பல நிலைகளைத் தனது திறமையான பணி மூலம் அவர் எட்டியுள்ளார். மும்பை வெடிகுண்டு வழக்கு விசாரணை அவரது சிறந்த பணியை எடுத்துக்கூறுவதாக இருக்கும். சக நீதிபதிகளையும் வழக்குரைஞர்களையும் மனுதாரர்களையும் மதிக்கக்கூடிய கண்ணியமிக்கவர். அவரது பணி பாராட்டுக்குரியது. அவரைப் போலவே, நீதிபதி கியான் சுதா மிஸ்ராவும் பெண்கள், குழந்தைகள் நலன் சார்ந்த வழக்குள் உள்பட பல்வேறு வழக்குகளில் முக்கியத் தீர்ப்புகளை அளித்துள்ளார்' என்றார்.

    இந் நிகழ்ச்சியில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பிரவீண் பரேக், சங்கத்தின் துணைத் தலைவர் வி.சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் ராம் ஜேட்மலானி, ஃபாலி நாரிமன், பக்ருதீன், அரசு உயர் அதிகாரிகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai