Enable Javscript for better performance
ஜாகீர் நகர் தீ:சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    தென்-கிழக்கு தில்லியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தில் பெற்றோர், நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

    இது குறித்து தில்லி போலீஸார் கூறியதாவது: தென்-கிழக்கு தில்லி, ஜாமியா நகர், ஜாகீர் நகரைச் சேர்ந்தவர் ஃபெரோஸ் (35). இவரது வீட்டில் வியாழக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினர் இரு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஃபெரோஸ், அவரது மனைவி யாஸ்மின் (32), குழந்தைகள் அஃப்ரோஸ் (12), அஃப்ரீன் (11), ஆசிஃப் (7), ஆமீர் (4) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வரும் வழியிலேயே யாஸ்மின், மகள் அஃப்ரீன் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின்போது ஃபெரோஸ், அஃப்ரோஸ், ஆசிஃப் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஆமீர் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தான். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். தீவிபத்து நிகழ்ந்தபோது வீட்டிலிருந்து கூக்குரல் ஏதும் கேட்கவில்லை என்றும் வீட்டிலிருந்து புகை வெளியேறிய பிறகே தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்ததாக ஃபெரோஸின் அக்கம்பக்கத்து வீட்டார் கூறினர். அப் பகுதியில் ஃபெரோஸ் (35) எம்ப்ராய்டரி தொழிற்சாலை வைத்திருந்தார். அண்மையில்தான் வீடு ஒன்றை விலைக்கு வாங்கியிருந்தார். அந்த வீட்டில் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை குடியேற இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்த பிறகு 6 பேரின் சடலங்களும் ஜாமியா நகரில் உள்ள அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai