Enable Javscript for better performance
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஆண் புலி தாக்கி பெண் புலி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஆண் புலி தாக்கி பெண் புலி சாவு

    By புது தில்லி  |   Published on : 26th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இனவிருத்திக்கு விடப்பட்டபோது ஆண் புலி தாக்கியதில் பெண் புலி உயிரிழந்தது.

    இது குறித்து தேசிய உயிரியல் பூங்காவின் மூத்த வனவிலங்கு மருத்துவர் ந. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் தேசிய உயிரியல் பூங்காவில் ஐந்து வங்கப் புலிகள் உள்ளன. இவற்றில் இரண்டு பெண் புலிகள்; மூன்று ஆண் புலிகள்.

    அவற்றில் ஏழு வயதுடைய "ஜின்ஜிங்' என்ற பெண் புலி இனவிருத்திக்கு தயார் நிலையில் இருந்தது. இதனால், சமீபத்தில் மைசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட "ராமா' என்ற 9 வயது ஆண் புலி, இனவிருத்தி செய்ய உயிரியல் பூங்கா நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் இரு புலிகளும் ஒன்றாக, தகுந்த பாதுகாப்புடன் ஏறத்தாழ 10 பாதுகாவலர்களுடன் இனவிருத்திக்காக வெளியே விடப்பட்டது.

    முதல் முறையாக இனவிருத்திக்கு விடப்படும்போது விலங்குகளிடையே சண்டைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. என்றாலும், விலங்கு காப்பாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் அவை தனித் தனியாகச் சென்றுவிடும்.

    அதே போன்று இரு விலங்குகளும் சுமார் ஒன்றரை மணிநேரம் எந்தவித சண்டையுமின்றி ஒன்றின்பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தது. தீடீரென ஆண் புலி "ராமா', பெண் புலி "ஜின்ஜிங்'கின் கழுத்தை கடித்துக் குதறியது. இதைத் தொடர்ந்து, இரு புலிகளையும் பிரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. "ஜின்ஜிங்' இறந்த பிறகே ஆண் புலி தனியாக அங்கிருந்து பிரிந்து சென்றது. அது தனியாக கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. இறந்த பெண் புலிக்கு சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டியில் வைத்து எரிக்கப்படும் என்றார் ந. பன்னீர் செல்வம்.

    தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பூங்கா நிர்வாகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai