Enable Javscript for better performance
தீ விபத்தில் 500 குடிசைகள் சாம்பல் - Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி, வசந்த் குஞ்ஜ் - மசூத்பூரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 500 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    இத் தீ விபத்து வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது. தகவலறிந்ததும் 35 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் சுமார் 500 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. அதிருஷ்டவசமாக தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்தவர்களை மருத்துவனையில் சேர்க்கும் பணியில் 15 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன.

    துணைநிலை ஆளுநர் ஆய்வு: இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அப் பகுதியில் மருத்துவ முகாமை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி, உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதையடுத்து, அப் பகுதிக்கு நண்பகலுக்குள் தில்லி ஜல்போர்டின் 10 குடிநீர் டேங்கர் லாரிகள் வந்தன. மாநகராட்சி மருத்துவக் குழுவும் சம்பவ இடத்தில் முகாமிட்டது.

    மேலும், உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. தீ விபத்தில் வீட்டை இழந்தவர்கள் தங்குவதற்கு வசதியாக தாற்காலிக இரவுக் குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    மீட்பு, நிவாரப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai