Enable Javscript for better performance
\\\"வரும் முன் காப்போம்\\\'-டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்எம். வெங்கடேசன்- Dinamani

சுடச்சுட

  

  "வரும் முன் காப்போம்'-டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்எம். வெங்கடேசன்

  By புது தில்லி,  |   Published on : 26th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் கோடை கால வெயிலின் தாக்கம் உணரத் தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் பெய்த லேசான மழை வானிலையை மாற்றியுள்ளது. கோடையைத் தணிக்கும் பருவமழையை எண்ணி நிம்மதிப் பெருமூச்சுவிட்டாலும், டெங்கு கொசு பெருக்கம் கவலை கொள்ள செய்துவிடும். இந் நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை ஆகியன குறித்து தெற்கு தில்லி மாநகராட்சியின் மருத்துவ அதிகாரி டாக்டர் எம். சுந்தர்ராஜன் "தினமணி' நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

  தில்லியில் "டெங்கு பாதிப்பு காலம்' எப்போது தொடங்குகிறது? தில்லியில் டெங்கு பாதிப்பு பருவமழை பெய்யத் தொடங்கும் ஜூலை மாத இறுதியில் தொடங்கும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் வரை நீடிப்பது வழக்கம். தீபாவளி பண்டிகை நாள்களில் டெங்கு பாதிப்பு காலம் நிறைவடையும். பருவ மழை பெய்யத் தொடங்கும்போது டெங்கு கொசு பெருக்கமும் தொடங்கும். பருவ மழையின் தட்பவெப்பம் டெங்கு கொசு பெருக்கத்துக்கு ஏதுவாக அமைவதே இதற்குக் காரணம்.

  அறிகுறிகள் எவை? கண்டறிவது எப்படி? டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபருக்கு 104 சுமார் 105 டிகிரி செல்சியஸ் அளவுக்கு காய்ச்சல் இருக்கும். கை, கால், உடல் வலி இருக்கும். அதனால்தான் டெங்கு காய்ச்சல் "எலும்பு முறிப்பான் காய்ச்சல்' என அழைக்கப்படுகிறது. இத்துடன், முதுகு வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி ஆகியன டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.

  இத்துடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் நபருக்கு உடலில் சிகப்புப் புள்ளிகள் உருவாகும். வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஆகியனவும் ஏற்படும். இதுபோன்ற நிலை அபாய நிலை என அறியப்படுகிறது. டெங்கு பாதிப்பு இருப்பதை "சிராலஜி' சோதனை மூலம் அறியலாம்.

  அரசின் டெங்கு பரிசோதனை நிலையங்கள் எங்குள்ளன? எய்ம்ஸ் மருத்துவமனை, சஃப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனை, கஸ்தூர்பா

  காந்தி மருத்துவமனை, இந்துராவ் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை இலவசமாக செய்து கொள்ளலாம். இவை நீங்கலாக, சில தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது. அவற்றில் சிராலஜி சோதனைக்கு சுமார் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  டெங்கு எவ்வாறு ஏற்படுகிறது? பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும்? தேங்கியுள்ள சுத்தமான நீரில் ஈடிஸ் கொசு முட்டையிட்டு, அதன் மூலம் டெங்கு கொசு பெருக்கம் நடைபெறுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு உரிய நேரத்தில் உரிய சிகிக்சை அளிக்கும் பட்சத்தில் எளிதாக 10 நாள்களில் குணப்படுத்த முடியும். இதில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அபாய கட்டத்துத்குக் கொண்டு செல்கிறது. குறிப்பாக உடலில் ஒன்றரை லட்சம் முதல் 3 லட்சம் வரை ரத்தத் திட்டுகள் (பிளேட்லெட்) உள்ளன. டெங்கு காய்ச்சல் தாக்கப்படும் நபருக்கு ரத்தத் திட்டுகள் குறைகின்றன. இதனால், உடலில் நீர்ச் சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சில நேரங்களில் கோமா நிலைக்கு செல்வது அல்லது உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது. ரத்தத் திட்டுகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்துக்கு கீழே குறையும் போது, அவர் ஆபத்தான நிலையை அடைந்து விட்டார் என்பதை உணர்ந்து அவசர சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

  டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் என்ன? டெங்கு பரப்பும் ஈடிஸ் கொசு சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தியாகிறது. இதையடுத்து வீடு, குடியிருப்பு, மாடி, தோட்டம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக டயர், தேங்காய் மட்டை, ஏர் கூலர், குளிர்சாதனப் பெட்டி (ஏசி), பூந்தொட்டி, மீன் தொட்டி உள்ளிட்டவற்றால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டி மூடியிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீர் தேக்கத் தொட்டியை 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து உலற வைக்க வேண்டும்.

  சுத்தமான தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், கெரோசின், டீசல், பெட்ரோல் ஆகியவற்றை சிறிதளவு ஊற்றலாம். மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலகங்களில் கிடைக்கும் "டேம்பூஸ்' மருந்தையும் தெளிக்கலாம். கொசு கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள உடல் முழுவதும் மறையும் வகையில் ஆடை அணிய வேண்டும். வருமுன் காப்பதே நல்லது.

  தெற்கு தில்லி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் என்ன? குடியிருப்பு, அலுவலகங்களில் அமைந்துள்ள குடிநீர் தேக்கத் தொட்டி முறையாக மூடப்பட்டுள்ளனவா எனக் கண்டறிந்து, வீட்டில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் "டேம்பூஸ்" மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

  கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏசி. ஏர் கூலர் ஆகியவற்றில் கொசு பெருக்கம் ஏற்பாடத வகையில் "டேம்பூஸ்' தெளிக்கப்பட்டு வருகிறது. வீடுதோறும் டெங்கு தடுப்பு நடவடிக்கைள் வரும் நாள்களில் தீவிரப்படுத்தப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai