Enable Javscript for better performance
2ஜி: தயாளு அம்மாள், கனிமொழி, ராசா மீது குற்றப்பத்திரிகை- Dinamani

சுடச்சுட

  

  2ஜி: தயாளு அம்மாள், கனிமொழி, ராசா மீது குற்றப்பத்திரிகை

  By புது தில்லி  |   Published on : 26th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, உள்பட 19 பேர் மீதான குற்றப்பத்திரிகையை மத்திய அமலாக்கத் துறை தில்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

  அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் நவீன் குமார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிபதி ஓ.பி. சைனி பதிவு செய்து கொண்டார். இதையடுத்து, "குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 30-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்' என்று கூறினார்.

  குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது: "அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடையதாக தயாளு அம்மாள், கனிமொழி, ஆ. ராசா, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கே. கோயங்கா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, சரத் குமார், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி), குசேகான் ரியாலிட்டி (முன்பு குசேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ்), சினியுக் மீடி எண்டர்டெயின்மெண்ட் (முன்பு சினியூக் ஃபிலிம்ஸ்), கலைஞர் டிவி, டைனாமிக்ஸ் ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்ஸ், டிபி ரியாலிட்டி, நிஹார் கன்ஸ்டிரக்ஷன் ஆகிய 9 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  மேற்கண்ட அனைவரும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவின்படி, குற்ற நோக்குடன் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை நடைபெற உடந்தையாகவோ, அச்செயலில் நேரடியாகவோ ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

  இதில் குறிப்பிடப்பட்டவர்களில் 8 பேரும் ஒரு நிறுவனமும் ஏற்கெனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். தற்போது அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள், அமிர்தம் ஆகியோரின் பெயர்களும் 8 நிறுவனங்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

  அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ. 200 கோடி அளவுக்கு ராசா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளுக்கு லஞ்சமாக வழங்கியுள்ளது. இப் பணம், தனது குழும நிறுவனமாக டிபி ரியாலிட்டி மூலம் வெவ்வேறு நிறுவனங்கள் வழியாக கைமாற்றி, கடைசியாக கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்டது. கடன் வடிவிலும் பங்குகள் வாங்குவது என்ற போர்வையிலும் மேற்கொள்ளப்பட்ட இப் பரிவர்த்தனை சட்டப்பூர்மாக தோன்றும் வகையில் ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டன.

  அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணை தொடங்கியபோது அப் பணத்துக்கு கூடுதலாக ரூ. 223.44 கோடியை, வாங்கிய வழியிலேயே திருப்பிக் கொடுத்து அதைச் சட்டப்பூர்வ பரிவர்த்தனையாக கலைஞர் டிவி கணக்குக் காட்டியுள்ளது. இவை அனைத்தும் சிபிஐ வழக்கிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  ஆகவே, அந்த மதிப்புக்கான சொத்தை 2011, ஆகஸ்ட் 30-ஆம் தேதி முடக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, மேற்கண்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் குற்றப் பின்னணி, ஊழல் விவகாரங்கள் தொடர்புடையவற்றை 2007-ஆம் ஆண்டு முதல் சிபிஐ விசாரித்துவருகிறது. இது தொடர்பான வழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் தில்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

  இதற்கிடையே, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சிபிஐ சுமத்தியுள்ள ஊழல் புகாருடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் இடையே சட்டவிரோதமாக நடைபெற்றதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனை விவகாரத்தை மத்திய அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

  சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி, சரத் குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹித் உஸ்மான் பால்வா உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  கலைஞர் டிவி நிர்வாகிகள் அமிர்தம், தயாளு அம்மாள் சார்பில் அவரது ஆடிட்டர் ஆகியோரிடம் அதிகாரிகள் கடந்த ஆண்டு மூன்று முறை விசாரணை நடத்தினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai