Enable Javscript for better performance
சுற்றுலா மையமாக காத்திருக்கும் காஜிபூர்!- Dinamani

சுடச்சுட

    

    முகம் சுளிக்க வைக்கும் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுவரும் காஜிபூரில் உள்ள பிரமாண்ட இடம் சுற்றுலா மையமாகக் காத்திருக்கிறது.

    கிழக்கு தில்லியிலிருந்து உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமான பகுதி காஜிபூர். காய்கறிச் சந்தை, கோழி, ஆடு இறைச்சிக் கூடங்களுக்குப் பெயர் போன இடம். இங்கு பெரிய மலைபோல் பரந்து விரிந்து கிடக்கும் பகுதி பார்ப்பவரை ஈர்க்கும். ஆனால், அது மலை அல்ல; முகம் சுளிக்க வைக்கும் குப்பை மேடு. இப் பகுதியைத்தான் தலைநகரின் முக்கிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை தில்லி அரசும் மாநகராட்சியும் தீவிரமாக ஆராய்ந்துவருகிறது.

    சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது. இங்கு 1984-ஆம் ஆண்டு முதல் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. தில்லி நகரம், ஷாதரா (தெற்கு மற்றும் வடக்கு), பட்பர்கஞ்ச், மயூர் விஹார் உள்ளிட்ட பல பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 2,000 டன் குப்பைகள், கழிவுகள் காஜிபூரில் உள்ள இடத்தில் கொட்டப்படுகின்றன. மேலும், பழைய கட்டுமான இடிபாடுகளும் இங்குதான் கொட்டப்படுகின்றன. இந்த வகையில் சுமார் 750 லாரிகளில் கட்டுமான இடிபாடுகள் கொண்டுவரப்படுகின்றன.

    இவை தவிர குப்பை மேடு அருகே உள்ள காய்கறி, பழங்கள் மண்டி, கோழி, ஆடு இறைச்சிக்கூடம் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் கழிவுகளும் உரம் சேர்க்கும் கழிவுகளாக காஜிபூரில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைக் கழிவுகளில் இருந்து, தொழில்நுட்ப வளர்ச்சியால் மீத்தேன் வாயு உற்பத்தி செய்யலாம். இந்த வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். மேலும், இக் கழிவுகளைப் பதப்படுத்தி உரமாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

    இதைக் கருத்தில் கொண்டே, காஜிபூர் குப்பை மேடு அமைந்துள்ள பகுதியில் கெயில் நிறுவனம் சார்பில் மீத்தேன் வாயு சேகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. காற்றுப் புகாத நிலையில் பூமிக்கு அடியில் குப்பைக் கழிவுகளை அடைத்துவைத்து "நொதித்தல்' முறையில் மீத்தேன் வாயு சேகரிக்கப்படுகிறது.

    கிழக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் காஜிபூர் குப்பைக் கிடங்கு தளத்தின் செயற்பொறியாளர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது: காஜிபூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை மறுசுழற்சி முறையில் 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டள்ளது.

    தனியார் நிறுவனத்துடன் இணைந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கெயில் நிறுவனத்துடன் இணைந்து குப்பைக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் மீத்தேன் வாயு உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொண்டோம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அத் திட்டம் சிறப்பாகச் செயல்படவில்லை. எனவே, அதற்கு மாற்றாக வேறு திட்டங்களைச் செயல்படுத்த ஆய்வு செய்துவருகிறோம்.

    மேலும், காஜிபூரில் குப்பைக் கிடங்கு உள்ள பிரம்மாண்டமான இடத்தை சுற்றுலா மையமாக மாற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக, காஜிபூருக்கு மாற்றாக வேறொரு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து தருமாறு தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இடம் தேர்வு செய்து அளிக்கப்பட்டவுடன் இப் பகுதியை சுற்றுலா மையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.

    இப்போது நிஜாமூதின் அருகே உள்ள மில்லேனியம் பூங்காவும் ஒருகாலத்தில் குப்பைக்கிடங்காகக் காட்சியளித்த பகுதிதான். ஆனால், அது இப்போது சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. அதேபோல், காஜிபூர் குப்பைக்கிடங்கையும் சுற்றுலா மையமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஜெகதீஷ் குமார்.

    சுற்றுலா மையம் சாத்தியமா?: தலைநகரில் காஜிபூர் குப்பைமேடு போல, ஓக்லா, பலாஸ்வா ஆகிய பகுதிகளிலும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றன. அவை நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை எட்டிவிட்டதால், தொடர்ந்து கழிவுகள் கொட்டுவது சுகாதார கேட்டுக்கு வழி வகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    இதையடுத்து, சில ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், அப் பகுதியியில் மேலும் குப்பைகளைக் கொட்டக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்பு அரசை தில்லி உயர் நீதிமன்றம் கண்டித்தது. ஆனால், தில்லியில் குப்பைகளைக் கொட்ட மாற்று இடத்தை இன்னும் அரசு தேர்வு செய்யவில்லை. இதனால், தொடர்ந்து இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    குறைந்தது 10 ஆண்டுகளுக்கான குப்பையைக் கொட்டுவதற்கு 650 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால், அவ்வளவு பரப்பளவு கொண்ட இடத்தை ஒதுக்க தில்லி மேம்பாட்டு ஆணையம் தயாராக இல்லை என்று மூன்று மாநகராட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன.

    சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மதிப்பின்படி குப்பைகளை சேமிக்க தெற்கு தில்லிக்கு 300 ஏக்கர், வடக்கு தில்லிக்கு 200 ஏக்கர், கிழக்கு தில்லிக்கு 150 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால், இடம் தேவைப்படும் என்பதை உறுதிப்படுத்தும் அரசுத் துறைகள், இதற்கான திட்டத்தை முறைப்படி வகுத்து செயல்படுத்தாமல் உள்ளது.

    திட்டத்தை செயல்படுத்தினால்தான் காஜிபூரில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் வாய்ப்பு உருவாகும். அத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் சுற்றுலா மையமும் சாத்தியமாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai