Enable Javscript for better performance
56 பேருக்கு பத்ம விருதுகள்56 பேருக்கு பத்ம விருதுகள்- Dinamani

சுடச்சுட

  

  56 பேருக்கு பத்ம விருதுகள்56 பேருக்கு பத்ம விருதுகள்

  By புது தில்லி,  |   Published on : 27th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கௌரவித்தார்.

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், டாஃபே டிராக்டர் நிறுவனத்தின் மல்லிகா ஸ்ரீநிவாசன், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலர் டி. ராமசாமி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

  புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற நிகழ்வில் பாரத ரத்னாவுக்கு அடுத்த நிலையில் உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருதை கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற யோகா குரு பி.கே.எஸ். ஐயங்காருக்கு பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார். பாரம்பரியம் மிக்க இந்திய உடற்பயிற்சிக் கலையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பி, அக் கலையைப் பராமரித்து வருவதற்காக அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

  அவரைத் தொடர்ந்து பத்மபூஷண் விருது வழங்கப்பட்ட முக்கிய சாதனையாளர்கள் விவரம்: சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிவரும் இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் பண்டாரி, இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலர் டி. ராமசாமி, நடிகர் பரேஷ் ராவல் (மக்களவைத் தேர்தலில் கிழக்கு ஆமதாபாத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார்), டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், தில்லி ஐஐடி பேராசிரியர் வினோத் பிரகாஷ் சர்மா, கல்வியாளர் குலாம் முகம்மது ஷேக் உள்பட 11 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. கல்வியாளரும் "குஜராத்தி விஸ்வகோஷ்' அமைப்பின் நிறுவனருமான திருபாய் பிரேம்சங்கர் தாக்கர் உயிரிழந்துவிட்டதால் அவரது குடும்பத்தாருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

  விருது பெற வராதவர்கள்: பத்மபூஷண் விருதுக்கு மறைந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் விருதைப் பெற அவரது குடும்பத்தார் நிகழ்ச்சிக்கு வரவில்லை. பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், எழுத்தாளர் அனிதா தேசாய், பிரபல ஓவியர் சுனில் தாஸ் ஆகியோரும் விருது பெற வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளர்கள் வரிசையில் "டாஃபே' டிராக்டர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீநிவாசன், மேடை நாடகக் கலைஞர் முகம்மது அலி பெயிக், கிராமிய நடனக் கலைஞர் முசாஃபிர் ராம் பரத்வாஜ், பொது சுகாதார நிபுணர் இந்திரா சக்ரவர்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் முன்னாள் அணித் தலைவர் அஞ்சும் சோப்ரா, ஆங்கில மொழிக் கவிஞர் கேகி என். தாருவாலா, வங்க மொழி திரைப்பட நடிகை சுப்ரியா தேவி, மலையேறும் வீரர் லவ்ராஜ் சிங், தபேலா கலைஞர் விஜய் காட்டே, இந்திய புள்ளியல் நிறுவன பேராசிரியர் ஜெயந்த குமார் கோஷ், தில்லி புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிறுவன இயக்குநர் ராஜேஷ் குமார் குரோவர், கண் மருத்துவர் அமோத் குப்தா, வேதியியல் விஞ்ஞானி ராமகிருஷ்ணா விஜயாச்சார்யா, சமூக சேவகர்கள் முகுல் சந்திர கோஸ்வாமி, மனோரமா ஜஃபா, துர்கா ஜெயின், யுனானி மருத்துவ நிபுணர் ஹக்கீம் சையது கலீஃபதுல்லா, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் லலித் குமார், இதய சிகிச்சை நிபுணர் நிதீஷ் நாயக், அனிமேஷன் கலை வல்லுநர் ராம் மோகன் உள்பட 44 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

  புணே நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நரேந்திர அச்யுத் தபோல்கர் வழங்கிய பத்மஸ்ரீ விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

  இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற மொத்தம் 127 பேர் தேர்வாகியிருந்தனர். அதில் 66 பேருக்கு முதல் கட்டமாக கடந்த மார்ச் 31-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai