Enable Javscript for better performance
கார் மோதியதில் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ.10. 84 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கார் மோதியதில் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ.10. 84 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    By புது தில்லி  |   Published on : 28th April 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கார் மோதி உடல் பகுதியளவில் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீட்டை காருக்கு காப்பீடு செய்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குமாறு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து வழக்கு விவரம் வருமாறு:

    தில்லியை சேர்ந்தவர் சுனில் (29). குடிநீர் பாட்டில் வியாபாரி. இவர் 2012, மார்ச் 24-ஆம் தேதி தனது மோட்டார்சைக்கிளில் மதுரா ரோட்டில் சென்றுகொண்டிருந்தார்.

    வாகனத்தின் பின்னிருக்கையில் மனைவி அமர்ந்திருந்தார். ஹர்கேஷ் நகர் பஸ் நிலையப் பகுதியில் மோட்டார்சைக்கிள் சென்றுகொண்டிருந்தபோது அவ் வழியாக வந்த கார் அதன் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுனிலுக்கு இடது கால், கண்ணில் காயம் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து, காரின் ஓட்டுநர், உரிமையாளர், காருக்கு காப்பீடு செய்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியோர் இழப்பீடு தரக் கோரி தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயத்தில் சுனில்வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் "லாரியை அதன் ஓட்டுநர் வேகமாகவும் கவனக் குறைவாகவும் ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் எனது கண்களில் ஒன்று பாதிக்கப்பட்டது.

    இடது கால் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் தங்கி சிகிச்சைப் பெற்றேன்.

    கண்ணில் 20 சதவீதமும், காலில் 38 சதவீதமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வருவாய் இழந்து எனது குடும்பம் சிரமத்தில் உள்ளது. ஆகவே, எனது உடல் ஊனமுற கார் ஓட்டியின் கவனக்குறைவுதான் காரணம்' என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதையடுத்து, வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயத் தலைவர் பிரேம் குமார் பர்த்வால் அளித்த தீர்ப்பு: "சம்பவத்தன்று காரை கவனக் குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டு சுனில் உடலில் பகுதி அளவு ஊனம் ஏற்பட்டுள்ளதை போலீஸார் அளித்த ஆவணங்கள், மருத்துவர்கள் அளித்த சான்றுகள், சாட்சிகள் ஆகியவை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்துக்கான காரணத்தையும் தனது தரப்பு நியாயத்தையும் காரின் ஓட்டுநர் தீர்ப்பாயம் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

    இதனால், கார் ஓட்டுநரின் கவனக் குறைவும் வாகனத்தை வேகமாக ஓட்டியதும்தான் விபத்துக்குக் காரணம் என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே, சுனிலுக்கு ரூ. 10 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீட்டை காருக்கு காப்பீடு செய்த நிறுவனம் வழங்க வேண்டும்' என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai