Enable Javscript for better performance
பாரம்பரிய கட்டடங்கள் கணக்கெடுப்பு: வடக்கு தில்லி மாநகராட்சி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாரம்பரிய கட்டடங்கள் கணக்கெடுப்பு: வடக்கு தில்லி மாநகராட்சி திட்டம்

    By புது தில்லி  |   Published on : 28th April 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க, பாரம்பரிய கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சியின் பாரம்பரிய (ஹெரிடேஜ் கமிட்டி) குழுவின் உறுப்பினர் வர்த்திகா சர்மா ஞாயிற்றுக்கிழமை கூறியது: தில்லியில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்பு கடந்த 2011-12 இல் நடத்தப்பட்டது. அதில், 1,500 பாரம்பரிய கட்டடங்கள், குறிப்பாக 900 மாளிகை வகையான கட்டடங்கள் கண்டறியப்பட்டன.

    வடக்கு தில்லியில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த கட்டடங்கள், கோட்டைகள், மாளிகை கட்டடங்கள் அதிகம் உள்ளன. சிவில் லைன்ஸ் பகுதியில் சுன்னாமால் ஹவேலி, கஜான்சி ஹவேலி, நமக் ஹாராம் ஹவேலி கட்டடங்கள், தெற்கு தில்லி மெஹ்ரெüலியில் உள்ள பழைமையான கட்டடங்கள் உள்ளன. இது போன்ற எண்ணற்ற கட்டடங்கள், இடிக்கப்பட்ட பாரம்பரிய கட்டடங்கள் ஆகியவற்றைக் கண்டறிய கணக்கெடுக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டியுள்ளது. இவற்றில் கஷ்மீரி கேட் பகுதியில் தில்லி தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் பில்டிங், ஃப்ரேஸர் ஹவுஸ் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களும் அடங்கும்.

    இக் கட்டடங்களில் மேம்பாட்டுப் பணி, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அவற்றில் அமைந்துள்ள அரசு அலுவலக உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும். அவர்கள் மறுக்கும் பட்சத்தில் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும்.

    வேல்டு சிட்டியில் உள்ள பெரும்பாலான பாரம்பரிய கட்டடங்கள் தனியாருக்கு சொந்தமானவை. அக் கட்டடங்களின் சிறப்பு குறித்து அவற்றில் வசிக்கும் 4-ஆவது தலைமுறை உரிமையாளர்களுக்கு தெரிவதில்லை. இதையடுத்து, பாரம்பரிய கட்டடங்களை சிலர் இடித்துப் புதிய குடியிருப்புகளை ஏற்படுத்துகின்றனர். இவற்றைத் தடுக்கவும், பாரம்பரிய கட்டடங்களைப் பராமரிக்கவும் அக் கட்டடங்களுக்கு வீட்டு வரியிலிருந்து விலக்கு அளிப்பது, "சாப்ட் லோன்' அளிப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

    பாரம்பரிய கட்டடங்களைச் சுமையாகக் கருதாமல் வருமானம் ஈட்டும் ஆதரமாக அதன் உரிமையாளர்கள் கருத வேண்டும். இதற்காக, பாரம்பரிய கட்டடங்கள் தில்லி சுற்றுலாத் துறையுடன் இணைக்கப்படவுள்ளன. இதையடுத்து, தில்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய கட்டடங்களை சுற்றிப் பார்க்க முடியும். அதன் மூலம் கட்டட உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும் என்றார் வர்த்திகா சர்மா.

    தில்லியை உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கக் கோரி "யுனெஸ்கோ'அமைப்பிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள 30 பாரம்பரிய கட்டடங்கள் குறித்து தில்லி அரசின் தொல்லியல் துறை அறிவிக்கை வெளியிட்டது. இந் நிலையில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத வரலாற்றுப் பாரம்பரிய கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்பை தில்லி மாநகராட்சிகள் நடத்தவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai