Enable Javscript for better performance
புகார் மனுக்கள் 4,000-லிருந்து 150 ஆக குறைந்தது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் ஆம்ஆத்மி அரசு பதவி விலகியதற்குப் பிறகு அரசின் குறை கேட்புப் பிரிவுக்கு பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மிகவும் குறைந்தது. ஆம்ஆத்மி ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் இருந்து சராசரியாக 4,000 புகார்கள் கிடைக்கப் பெற்று வந்தன. ஆனால், இப்போது அது 150 ஆகக் குறைந்தது.

    பொதுமக்கள் தங்களது குறைகளை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் தில்லி அரசில் அதற்கென தனிப் பிரிவு உள்ளது. அப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அந்தெந்த துறைக்கு அனுப்பி வைப்பர்.

    இந் நிலையில, ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு பதவியேற்றதும், வாரத்துக்கு சராசரியாக 4,000 புகார் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. ஆனால் இப்போது 150 புகார் மனுக்கள்தான் கிடைக்கப்பெற்று வருகின்றன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதில் 90 சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு கிடைக்காத நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, இதுவரை பெறப்பட்ட புகார் மனுக்கள் எத்தனை? அவற்றின் தற்போதைய நிலை என்ன? எத்தனை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உள்ளிட்டவை குறித்து அறிக்கை அளிக்குமாறு குறை கேட்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அரசின் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

    அரசுத் துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை, பொதுமக்களின் மனுக்கள் மீது போதிய கவனம் செலுத்தாதது போன்றவற்றால்தான் புகார் மனுக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே, இது தொடர்பாக முதல்வர் அலுவலகக் கூடுதல் செயலாளர் ரவி தாதிச் தலைமையில் அண்மையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது, அவர் கூறுகையில், "நிலுவையில் உள்ள சுமார் 15,000 புகார் மனுக்களில் 15 சதவீதம் தில்லி போலீஸ், வடக்கு, தெற்கு மாநகராட்சி, கல்வித் துறை, தில்லி நகர்ப்புற ஆணையகம், புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (என்டிஎம்சி) உள்ளிட்ட துறைகள் சம்பந்தப்பட்டவை' என்றார்.

    இப்போது பொதுமக்களிடம் இருந்து வாரந்தோறும் 150 புகார் மனுக்கள்தான் கிடைக்கப் பெறுகின்றன. பெறப்படும் புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai