Enable Javscript for better performance
முதிய தம்பதியை தாக்கி கொள்ளை: நால்வருக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    முதிய தம்பதியை தாக்கி கொள்ளை: நால்வருக்கு ஆயுள் சிறை

    By புது தில்லி,  |   Published on : 28th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் நால்வருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும், இதே வழக்கில் தொடர்புடைய வீட்டுப் பணிப் பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வழக்கு விவரம் வருமாறு: தில்லி குஜ்ரவாலன் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கே.எல். மன்சந்தா (75). இவரது மனைவி கமலா தேவி (70). வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் அருகில் உள்ள வேறு பகுதியில் வசித்து வந்தார். மன்சந்தா பல்வேறு நோய்களால் அவதியுற்று வந்தார். கமலா தேவிக்கு பக்கவாதம் பாதிப்பு இருந்தது.

    இந் நிலையில், 2012, ஜூன் மாதம் இவர்களது வீட்டுக்குள் கொள்ளைக் கும்பல் புகுந்தது. கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மன்சந்தா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வீட்டிலிருந்த தங்க நகைகள், மொபைல் போன்ற உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    போலீஸார் விசாரணை நடத்தி காளி சரண் (48), சர்வேஷ் குமார் (33), சந்தர் பன் (30), அமித் (30), வீட்டுப் பணிப் பெண் பீம்லேஷ் (30) ஆகியோரைக் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய அனில் என்பவர் தலைமறைவானார்.இந்த வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணையின் போது, "2012, ஜூன் மாதத்தில் பட்டப்பகலில் மன்சந்தாவின் வீட்டுக்குள் காளி சரண், சர்வேஷ் குமார், சந்தர் பன், அமித், அனில் உள்ளிட்டோர் புகுந்தனர். கத்தியைக் காட்டி மிரட்டிய போது எதிர்ப்புத் தெரிவித்த மன்சந்தை கத்தியால் தாக்கினர்.

    இதில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். பிறகு வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்பட விலையுயர்ந்த பொருள்கள், செல்போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் வீட்டின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

    மன்சந்தாவின் வீட்டின் அருகில் வசிக்கும் நீதித் துறை தீர்ப்பாயத் தலைவர் டி.பி. சர்மா கொள்ளையர்களை நேரில் பார்த்தார். இக் கொள்ளைக்கான சதித் திட்டத்தை பழ வியாபாரி சரணும், வீட்டுப் பணிப் பெண் பீம்லேஷ் உள்ளிட்டோர் தீட்டினர்.

    முதிய தம்பதிக்கு பல ஆண்டுகளாக அறிமுகமான சரண், பீம்லேஷை கொள்ளைச் சம்பவம் நிகழ்வதற்கு சில தினங்களுக்கு முன்புதான் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

    வீட்டின் அலமாரியில் முதிய தம்பதி பணம் வைக்கும் இடம் குறித்து அவ்வப்போது சரணுக்கு பீம்லேஷ் தகவல் தெரிவித்து வந்தார். அதன் பேரில் கூட்டாகச் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டனர்' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சியமாக டி.பி. சர்மா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி காமினி லா அளித்த தீர்ப்பு: குற்றம்சாட்டப்பட்ட காளி சரண், சர்வேஷ் குமார், சந்தர் பன், அமித் ஆகியோர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீட்டுப் பணிப் பெண் பீம்லேஷ், குற்றத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்பது சாட்சியங்கள் மூலம் தெரியவருகிறது. அவருக்கு இரு குழந்தைகள் உள்ளதைக் கருத்தில் கொண்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது.

    சமூகத்தில் முதியோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை இக் கொள்ளைச் சம்பவம் வெளிப்படுவத்துவதாக உள்ளது.

    பட்டப்பகலில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை பார்க்கும்போது சட்டத்தின் மீது குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு மரியாதையும் பயமும் இல்லாததையே காட்டுவதாக உள்ளது. முதியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், இது போன்ற குற்றங்கள் நிகழாதவாறு தடுக்க வேண்டும்' என்று நீதிபதி குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai