Enable Javscript for better performance
லாஜ்பத் நகர் கொள்ளை சம்பவம்: போலீஸ் மீட்ட ரூ.4.85 கோடியை கருவூலத்தில் செலுத்த முடிவு- Dinamani

சுடச்சுட

    

    லாஜ்பத் நகர் கொள்ளை சம்பவம்: போலீஸ் மீட்ட ரூ.4.85 கோடியை கருவூலத்தில் செலுத்த முடிவு

    By புது தில்லி  |   Published on : 28th April 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி லாஜ்பத் நகரில் தொழிலதிபரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட ரூ. 4.85 கோடியை அரசுக் கருவூலத்தில் செலுத்த தில்லி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "லாஜ்பத் நகர் கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 4.85 கோடி மீட்கப்பட்டுள்ளது. இப் பணம் தொழிலதிபர் ராஜேஷ் கல்ராவுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், இப் பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை. இதனால், நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று இப் பணத்தை அரசுக் கரூவூலத்தில் செலுத்த உள்ளோம். இதை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பான தகவல் ஏற்கெனவே வருமான வரித் துறைக்கும் அமலாக்க இயக்ககத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

    பின்னணி: தெற்கு தில்லி லாஜ்பத் நகரில் கடந்த ஜனவரி 28-ம் தேதி காலையில் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜேஷ் கல்ரா தனது அலுவலகத்திற்கு ஊழியர் 4 பேருடன் ஹோண்டா சிட்டி காரில் சென்றார். அப்போது, மற்றொரு காரில் வந்த 7 பேர் கும்பல் அக் காரை வழிமறித்து ரொக்கம் ரூ. 7.69 கோடியுடன் காரைக் கடத்திச் சென்றது. இது தொடர்பாக, குல்ஜர் அலி, பிரவீண் குமார், திலக்ராஜ் லோஹியா (எ) திங்கு, சதீஷ் திரிபாதி, ஜோகிந்தர் (எ) ஜானி, அஜய் நாகர்வால், சுனில் குமார் (எ) காகே, சந்தீப் குமார், சிவசக்தி என்ற சக்தி, பிரதீப் (எ) மகேந்தர், பிரேம் சிங், ஹரிதாஸ் என்ற பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பிடிபட்டுள்ள மைனர் சிறார், தொழிலதிபர் ராஜேஷ் கல்ராவின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்தவர்.

    அஜய் நாகர்வால், சக்தி நாயுடு ஆகிய இருவருடனும் சேர்ந்து மைனர் சிறார் இக் கொள்ளைக்கு சதித் திட்டம் வகுத்து நிறைவேற்றியதாக கூறப்பட்டது. இதில் சாகேத் நீதிமன்றத்தில் சக்தி நாயுடு சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் அஜயை போலீஸார் கைது செய்தனர். கைதான சந்தீப் குமார் ஹரியாணா மாநில காவல் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவர். கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட ஒருவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பவிட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai