Enable Javscript for better performance
அனைத்து பள்ளிகளிலும் 5-6 இடங்களை அதிகரிக்க பரிசீலிக்கலாம்: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து பள்ளிகளிலும் 5-6 இடங்களை அதிகரிக்க பரிசீலிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேறு மாநிலங்களில் இருந்து தில்லிக்கு மாற்றலாகிவரும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் அளிக்கும் வகையில், நர்சரி மாணவர்கள் சேர்க்கைக்காக தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 5 முதல் 6 இடங்கள் வரை அதிகரிக்கப் பரிசீலிக்கலாம் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    வேறு மாநிலங்களில் இருந்து தில்லிக்கு மாற்றலாகிவரும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கான பிரிவுக்கு நர்சரி வகுப்பில் சேர்க்கைக்கு 5 புள்ளிகள் அளிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட நர்சரி மாணவர்கள் சேர்க்கைக்கான தில்லி அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிகளில் அந்த வசதி இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, தில்லியில் உள்ள நர்சரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு வெளி மாநிலங்களில் இருந்து தில்லிக்கு பணி மாற்றல் செய்யப்பட்ட சில பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் சேர்க்கையை தாற்காலிமாக நிறுத்திவைக்குமாறு அண்மையில் உத்தரவிட்டது.

    இந் நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, "வெளி மாநிலங்களில் இருந்து மாற்றலாகி வரும் பெற்றோரின் குழந்தைகளைச் சேர்க்க ஏதுவாக நர்சரி பள்ளிகளில் நிகழ் கல்வி ஆண்டில் 5 முதல் 6 இடங்களை அதிகரிக்கப் பரிசீலிக்குமாறு தில்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

    மேலும், இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தில்லி அரசையும் தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களையும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

    "இது கொள்கை விவகாரம். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அரசும் பள்ளிகளும் இந்த விவகாரத்தில் தீர்வு காண முடியாவிட்டால், அதன் பிறகு உச்ச நீதிமன்றம் தீர்வு காணும்' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்ரல் 29) ஒத்திவைத்தனர்.

    பின்னணி: தில்லியில் நர்சரி மாணவர்கள் சேர்க்கைக்கு துணைநிலை ஆளுநர் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு அருகே வசிப்போருக்கு 70 புள்ளிகள், பள்ளியில் ஏற்கெனவே பயிலும் குழந்தையின் உடன் பிறந்தவர் என்றால் 20 புள்ளிகள், முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் என்றால் அதற்கு 5 புள்ளிகள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த 95 புள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாணவர்களை சேர்ப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறி தனியார் பள்ளி நிர்வாகங்கள், நர்சரி பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

    அதை விசாரித்த உயர் நீதிமன்றம், துணைநிலை ஆளுநர் அறிவித்த வழிகாட்டுதல்களின்படி மாணவர்கள் சேர்க்கையைத் தொடரலாம் என்றும், வேறு மாநிலங்களில் இருந்து தில்லிக்கு மாற்றலாகி வரும் பெற்றோர்களின் குழந்தைகள் தொடர்பாக பின்னர் முடிவெடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது.

    இந் நிலையில், வேறு மாநிலத்தில் இருந்து மாற்றலாகிவரும் பெற்றோரின் குழந்தைகளை எந்த அடிப்படையில் சேர்ப்பது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தாததால், அவர்களின் குழந்தைகள் நர்சரி வகுப்புகளில் சேர்வதில் குழப்பம் நீடித்தது. சில பள்ளிகளில் இக் காரணத்தைக் குறிப்பிட்டு மாணவர்கள் சேர்க்கை மறுக்கப்பட்டது.

    இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் எச்.எல். தத்து, எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவர் சேர்க்கையை தாற்காலிகமாக நிறுத்திவைக்க கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai