Enable Javscript for better performance
அமர்நாத் யாத்திரை: விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அமர்நாத் கோயிலுக்கு புனித யாத்திரை செல்லும் யாத்ரிகர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தை விரைவில் மேற்கொள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

    அமர்நாத் யாத்திரை இயற்கைச் சூழலில் மேற்கொள்ளப்படும் கடினமான யாத்திரையாகும். இந்த யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் மேற்கொள்கின்றனர். யாத்திரையின் போது பல்வேறு இடர்பாடுகளை யாத்ரிகர்கள் மேற்கொள்ளும் சூழல் உள்ளதால், போதிய விழிப்புணர்வு அளிப்பது அவசியமாகிறது.

    இதுபோன்ற விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரும் ஸ்ரீ அமர்நாத்ஜி கோயில் வாரியத்தின் தலைவருமான என்.என். வோரா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலர் பிமல் ஜுல்கா தலைமையில் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தின்போது பிமல் ஜுல்கா கூறியதாவது:

    நிகழாண்டில் அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி, இது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் மூலம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரையின்போது யாத்ரிகர்கள் எதிர்கொள்ளும் மருத்துவப் பிரச்னைகள், சவால்கள் குறித்து யாத்ரிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள தகவல்கள், ஆவணப் படங்கள், விடியோ, ஆடியோ ஒலி, ஒளிப்பதிவுகள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். பிராந்திய மொழிகளிலும் இப் பிரசாரத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பிமல் ஜுல்கா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai