Enable Javscript for better performance
இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.- Dinamani

சுடச்சுட

    

    இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    By புது தில்லி  |   Published on : 29th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்டோவில் சென்றவரிடம் பணத்தைக் கொள்ளையடித்ததுடன், அவரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விவரம் வருமாறு: தில்லியை சேர்ந்தவர் சுர்ஜீத். ஆட்டோவில் சென்ற போது இவரிடம் பணத்தைக் கொள்ளையடித்துத் தாக்கிய வழக்கில் அசோக் நகரைச் சேர்ந்த குல்ஸார் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் கூறியது: "2012, பிப்ரவரி 11-ஆம் தேதி இரவு, வடகிழக்கு தில்லி பகுதியில் உள்ள லோனி ஏரியாவில் சுர்ஜீத் ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் ஏற்கெனவே இருவர் அமர்ந்திருந்தனர். ஜோதி நகர் பகுதியில் சென்றபோது ஆட்டோவில் இருந்தவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சுர்ஜீத்திடம் இருந்து பணப்பை, சட்டையில் வைத்திருந்த ரூ.5,200 ஆகியவற்றைக் கொள்ளையடித்தனர். அப்போது, சுர்ஜீத் கூச்சலிட்டதும் அவர்கள் தாக்கினர். இந் நிலையில், சுர்ஜீத்தின் கூச்சல் சப்தம் கேட்டு வழிப்போக்கர்கள் ஆட்டோவை நிறுத்தினர். அப்போது, ஆட்டோ ஓட்டுநரும் வேறு ஒரு நபரும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டனர். குல்ஸர் (20) பிடிபட்டார். மறுநாள் அவரது கூட்டாளி கோபால் பிடிபட்டார். குல்ஸர் அசோக் நகரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநர் கல்லூ தலைமறைமாகிவிட்டார். ஆட்டோ உரிமையாளர் முகேஷும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    வழக்கு விசாரணையின்போது ஆட்டோ ஓட்டுநர் கல்லூவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

    இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜே.ஆர். ஆர்யன் அளித்த தீர்ப்பு:

    குற்றம்சாட்டப்பட்ட குல்ஸருக்கு எதிராக போலீஸார் அளித்த ஆதாரங்கள், சந்தர்ப்ப சூழல் சாட்சியங்கள் ஆகியவை அவர் மீதான குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 394-இன்படி குல்ஸருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கோபால், ஆட்டோ உரிமையாளர் முகேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சியங்கள், ஆதாரங்கள் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இதனால், இருவரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai