Enable Javscript for better performance
சிபிஐ சிறப்பு இயக்குநர் தேர்வு தள்ளிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிபிஐ சிறப்பு இயக்குநர் தேர்வு தள்ளிவைப்பு

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவிக்கு தகுதி வாய்ந்த அதிகாரியை தேர்வு செய்யும் நடைமுறையை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. இதையொட்டி மக்களவைத் தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்டுவருகின்றன. தேர்தல் முடிவு மே 16-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

    இந் நிலையில், மிகவும் நுட்பம் வாய்ந்த சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவிக்கு தகுதி வாய்ந்த அதிகாரியைத் தேர்வு செய்யும் நடைமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, அப் பதவிக்கு ஒடிசா மாநில டிஜிபி கே.எஸ். பிரகாஷ் மிஸ்ரா, கேரள டிஜிபி கே.எஸ். பாலசுப்பிரமணியம், இந்திய காவல் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை இயக்குநர் ராஜன் குப்தா ஆகியோர் அடங்கிய பெயர் பட்டியலை மத்திய உள்துறை தயாரித்துள்ளது. இதில் பிரகாஷ் மிஸ்ராவின் பதவிக் காலம் 2016-ஆம் ஆண்டு வரையும் மற்ற இரு அதிகாரிகளின் பதவிக் காலம் 2015 மே மாதத்துடனும் நிறைவடைகிறது.

    இதன்படி, பட்டியலில் உள்ள அதிகாரிகளை இறுதி செய்வது தொடர்பாக தில்லியில் மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார் தலைமையிலான உயர்நிலைக் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது. இக் குழுவில் மத்திய கண்காணிப்பு ஆணையர்கள் ஜே.எம். கர்க், ராஜீவ், மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி, மத்திய பணியாளர் நலத் துறைச் செயலர் எஸ்.கே. சர்கார், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இக் குழு தேர்வு செய்து அளிக்கும் பரிந்துரைப்படியே பிரதமர் தலைமையிலான உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை, தகுதிவாய்ந்த அதிகாரியை நியமிக்க ஒப்புதல் வழங்கும். மேலும், சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்படும் அதிகாரி எதிர்காலத்தில் அதன் இயக்குநர் பதவியை ஏற்கும் நிலைக்கும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தில்லியில் திங்கள்கிழமை கூடிய உயர்நிலைக்குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

    இந் நிலையில், தற்போதைய மத்திய அரசின் பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், சிறப்பு இயக்குநர் தேர்வு நடைமுறைகளை தாற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும், புதிய அரசு அமைந்ததும் அதைத் தொடரவும் உயர்நிலைக் குழு முடிவு செய்தது.

    அதே சமயம், உயர்நிலைக் குழுவில் ஒரு டிஐஜி, ஐந்து கண்காணிப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கு தகுதிவாய்ந்த அதிகாரிகளைத் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் இறுதி செய்யும் பட்டியலுக்கு அடுத்த வாரம் முறைப்படி ஒப்புதல் தெரிவிக்கப்பட்டால் சிபிஐ பணியில் டிஐஜி, ஐந்து கண்காணிப்பாளர் பதவிக்கான இடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவி வகித்த கே. சலீம் அலி கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து காலியான அந்த இடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai