Enable Javscript for better performance
வடக்கு தில்லி மாநகராட்சி மேயரானார் யோகேந்திர சந்தோலியா- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகராட்சி மேயரானார் யோகேந்திர சந்தோலியா

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லி மாநகராட்சி மேயராக யோகேந்திர சந்தோலியா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

    இம் மாநகராட்சி மேயர், துணை மேயர், மூன்று நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக, நிதியாண்டில் முதலாவது கூட்டம் வடக்கு தில்லி மாநகராட்சியின் டாக்டர் சியாம்பிரசாத் முகர்ஜி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 21-ஆம் தேதி நிறைவடைந்தது. மேயர் பதவிக்கு யோகேந்திர சந்தோலியா (பாஜக), துணை மேயர் பதவிக்கு ரவீந்திர குப்தா (பாஜக) ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    மாநகராட்சி நிலைக் குழுவில் காலியாக உள்ள 3 உறுப்பினர்களின் பதவிக்கு ரேகா குப்தா (பாஜக), சஞ்சீவ் நய்யர் (பாஜக), பிருத்வி சிங் ராத்தோர் (காங்கிரஸ்) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இப்பதவிகளுக்கு வேறு யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து போட்டியின்று மூன்று பேரும் நிலைக்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநகராட்சி விதிகளின்படி பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் பிரதிநிதி, அவைத் தலைவர், நிலைக்குழுவின் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கத் தகுதி பெறுவர். அந்த வகையில், மாநகராட்சி அவைத் தலைவராக மீரா அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.

    இதேபோல, பாஜக சார்பில் நிலைக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா, நிலைக்குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் முன்னாள் மேயர்கள் ஆசாத் சிங், மீரா அகர்வால், உறுப்பினர்கள் மோகன் பரத்வாஜ், பூர்ணிமா வித்தியார்தி, சத்யா பால், ராகேஷ் குமார், வி.பி. பாண்டே, ராம் தேவ் குப்தா, மாநகராட்சி ஆணையர் பி.கே. குப்தா உள்ளிட்டோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நிலைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரை வாழ்த்திப் பேசினர்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர் யோகேந்திர சந்தோலியா கூறுகையில், "இம் மாநகராட்சியில் சுற்றுப்புற சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாநகராட்சியின் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் இணைந்து செயல்படும். பருவமழைக்கு முன்பாக, கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படும்' என்றார்.

    துணை மேயர் ரவீந்திர குப்தா கூறுகையில்,"வடக்கு தில்லி மாநகராட்சியில் ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதுடன், திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்' என்றார்.

    மேயர் யோகேந்திர சந்தோலியா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோகேந்திர சந்தோலியா, 2012 மாநகராட்சித் தேர்தலில் தேவ் நகர் வார்டில் போட்டியிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கேதார் நாத்தை 3,399 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த ஆண்டு நிலைக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

    துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரவீந்திர குப்தா, வடக்கு தில்லி மாநகராட்சியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கரோல் பாக் வார்டில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நரேஷ் சர்மாவை 4,100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சியின் மேயர், நிதியாண்டின் முதலாவது கூட்டத் தொடரில் ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    மாநகராட்சியின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில், மேயர் பதவி முதல் ஆண்டில் பெண்களுக்கும், 2-ஆவது ஆண்டில் பொதுப் பிரிவினருக்கும், 3-ஆவது ஆண்டில் தாழ்த்தப்பட்டோருக்கும் (தனி), 4, 5-ஆவது ஆண்டுகளில் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai