Enable Javscript for better performance
கிழக்கு தில்லி மாநகராட்சி மேயரானார் மீனாட்சி- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி வெற்றி பெற்றார். துணை மேயராக அக் கட்சியைச் சேர்ந்த ஜெய்கோபால் வெற்றி பெற்றார்.

    மாநகராட்சி மேயர் பதவிக்கு மீனாட்சி (பாஜக), துளசி (காங்கிரஸ்), துணை மேயர் பதவிக்கு ஜெய்கோபால் (பாஜக), ஆஸ் முகமது (காங்கிரஸ்) ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். முன்னதாக கிழக்கு தில்லி மாநகராட்சிக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியதும், இதுவரை மேயர் பதவி வகித்து வந்த ராம் நாராயண் துபே, மேயர் வேட்பாளர்களை அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 60 வாக்குகள் பதிவாகின. ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி 34 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துளசி (காங்கிரஸ்) 25 வாக்குகள் பெற்றார்.துணை மேயர் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த ஜெய் கோபால் 34 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆஸ் முகமது 25 வாக்குகள் பெற்றார்.

    மாநகராட்சி நிலைக் குழுவில் காலியாகவுள்ள 3 உறுப்பினர்களின் பதவிக்கு பாஜகவைச் சேர்ந்த பி.பி. தியாகி, ராம் நாராயண் துபே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சவிதா சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்  அவர்கள் போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

    மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மீனாட்சி 2012 மாநகராட்சித் தேர்தலில் ஷிவ் விஹார் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்கோபால், 2012 மாநகராட்சித் தேர்தலில் அனார்கலி வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai